கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை கொண்டு வந்தார். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு, நாளை (25-ந்தேதி) 40 ஆண்டுகள் நிறைவு அடைகிறது. அந்த காலகட்டத்தில் இந்திரா காந்தியின் அந்தரங்க உதவியாளராக இருந்து, அதிகாரமிக்கவராக வலம் வந்தவர் ஆர்.கே.தவான். அவர், நெருக்கடி கால நினைவுகளை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.
அதில் ஆர்.கே.தவான் கூறுகையில்,
அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து (1971-ம் ஆண்டு தேர்தலில், ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி ராஜ்நாராயண் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்து, ‘இந்திரா வெற்றி பெற்றது செல்லாது; அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது’ என 1975-ம் ஆண்டு, ஜூன் 12-ந்தேதி அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ஜகமோகன் லால் சின்கா தீர்ப்பு அளித்தார்.) இந்திரா காந்தி பதவி விலக தயார் ஆனார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை தட்டச்சு செய்வதற்கு கூறினார். ராஜினாமா கடிதம் தயார் ஆனது. ஆனால் அவர் கையெழுத்திடவில்லை.
ஜெகஜீவன்ராம் தலைமையில் அத்தனை மந்திரிகளும் இந்திராவை வந்து சந்தித்து, அவர் பதவி விலகக்கூடாது என வற்புறுத்தினர். இதையடுத்து அவர் ராஜினாமா செய்யவில்லை.நெருக்கடி நிலையை அமல்படுத்த வேண்டும் என்ற யோசனையை இந்திராவுக்கு முதலில் தெரிவித்து, 1975 ஜனவரி 8-ந்தேதி கடிதம் எழுதியவர், அப்போதைய மேற்கு வங்காள முதலமைச்சர் சித்தார்த்த சங்கர்ரே ஆவார். அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து அதை அவர் மேலும் வலியுறுத்தினார்.
அதன்பின்னர் இந்திரா காந்தியும், சித்தார்த்த சங்கர்ரேயும் அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவை சந்தித்தனர். நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஜனாதிபதியும் அதை ஏற்றார். அவருக்கு தயக்கம் இல்லை. நெருக்கடி நிலை பிரகடன வரைவை தயார் செய்யும்படி, சித்தார்த்த சங்கர்ரேயை ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அவரும் தயார் செய்து கொடுத்தார். நள்ளிரவுக்குமுன், நான்தான் அந்த வரைவை ஜனாதிபதி கையெழுத்திடுவதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு எடுத்துச்சென்றேன்.
340 தொகுதிகள் வரை ஜெயிக்க முடியும் என்று உளவுத்துறை அறிக்கை அளித்ததை தொடர்ந்து 1977 பொதுத்தேர்தலை இந்திரா காந்தி அறிவித்தார். அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்த செய்தியை, அவரிடம் நான்தான் கூறினேன். அப்போது அவர் இரவு உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது அவரது முகத்தில் ஒரு நிம்மதியை பார்க்க முடிந்தது. “இனி எனக்கும், குடும்பத்துக்கும் நேரம் செலவிட முடியும்” என கூறினார். அடுத்த 3 ஆண்டுகள் அவருக்கு கஷ்ட காலம். எதிர்க்கட்சியாக இருக்க வேண்டியதாயிற்று. அவர் அடிக்கடி வருத்தத்துடன் காணப்பட்டார். ஆனால் அவர் ஒருபோதும் அழுதது இல்லை. வருத்தத்துக்கு மத்தியிலும் மிகவும் துணிவுடன் இருந்தார். எதிர்த்து நின்று போராடுவதில் உறுதியாக இருந்தார் என ஆர்.கே.தவான் தெரிவித்துள்ளார்.