பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்கா அதிபர் ஜேக்கப் ஜூமா இடையேயான பேச்சுவார்த்தையின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மொசாம்பிக் நாட்டில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, தென்னாப்பிரிக்காவுக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு அவர், தலைநகர் பிரிட்டோரியாவில் அந்நாட்டு அதிபர் ஜூமாவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு, உற்பத்தித் துறை, பயங்கரவாதம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது, இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு, உற்பத்தித் துறை, சுரங்கம், மற்றும் கனிமங்கள் போன்ற முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரித்துக் கொள்வதென்று முடிவெடுக்கப்பட்டது.
பாதுகாப்புத் தளவாடங்களை தயாரிப்பதற்கு இந்தியா சிறந்த இடமாக திகழ்வதாகவும், இரு நாடுகளும் சேர்ந்து தங்களது தேவைகளுக்காக மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலக நாடுகளின் தேவைகளுக்கும் ஆயுதங்களைத் தயாரித்து வழங்கலாம் என்றும் மோடி யோசனை தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்க அதிபரிடம் மோடி நன்றி: அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) உறுப்பினராவதற்கு இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, தென்னாப்பிரிக்க அதிபரிடம் என்எஸ்ஜி அமைப்பில் உறுப்பினராகச் சேரும் இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு அளித்து வருவதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
4 ஒப்பந்தங்கள் கையெழுத்து:
பேச்சுவார்த்தையின்போது, இந்தியாவுக்கும், தென்னாப்பிரிக்காவும் இடையே தகவல் தொழில்நுட்பம், கலை, கலாசாரம், சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதையடுத்து, பிரதமர் மோடியும், ஜேக்கப் ஜூமாவும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது மோடி கூறியதாவது:
மகாத்மா காந்தி, இந்தியாவைப் போலவே தென்னாப்பிரிக்காவுக்கும் உரியவராவார். இந்த பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய மனிதர்களான மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு மரியாதை செலுத்துவதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பாக தென்னாப்பிரிக்கா பயணத்தை தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன்.
பயங்கரவாதம், இரு நாடுகளுக்கும் மற்றொரு பொதுவான பிரச்னையாக உள்ளது. பொது மக்களின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக பயங்கரவாதம் இருக்கிறது. எனவே பயங்கரவாதத்துக்கு எதிராக பிராந்திய மற்றும் உலக அளவில் இரு நாடுகளும் தங்களிடையே ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வதென நானும்,தென்னாப்பிரிக்க அதிபரும் ஒப்புக் கொண்டுள்ளோம். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த ஆண்டின் இறுதியில் இந்தியா வரவுள்ள ஜூமாவை வரவேற்க நான் ஆவலுடன் உள்ளேன் என்றார் மோடி.
தென்னாப்பிரிக்க அதிபர் ஜூமா கூறுகையில், “2ஆவது முறையாக தென்னாப்பிரிக்கா வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறேன். நாங்கள் இருவரும் பரஸ்பரம் இருதரப்பு விவகாரம் குறித்தும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் உள்ளிட்ட சர்வதேச விவகாரம் குறித்தும் ஆலோசனை நடத்தினோம்’ என்றார்.