பான் கார்டு’ விவரம் கேட்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் இன்று ஒருநாள் நகைக்கடைகள் அடைக்கப்படும் என்று நகை வியாபாரிகள் சம்மேளனம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து நகை வியாபாரிகள் சம்மேளனத்தின் முக்கிய ஆலோசகர் எல்.கே.எஸ். சையது அகமது கூறியதாவது:- தமிழகத்தில் மொத்தம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளன. இந்தியாவில் மொத்த தங்க நகை விற்பனையில் 50 சதவீதம் தமிழகத்தில் தான் நடக்கிறது. இந்தநிலையில் மத்திய அரசு கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் ரூ.2 லட்சத்துக்கு மேல் நகைக்கடைகளில் நகைகள் வாங்குபவர்கள், கட்டாயம் தங்களது ‘பான் கார்டு’ விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனால் தற்போது நகைக்கடைகளில் 30 சதவீத நகை விற்பனை பாதித்து உள்ளது. பொதுவாக கிராமத்தை சேர்ந்தவர்கள், பெண்கள் தான் அதிகமாக நகைக்கடைகளுக்கு வருவார்கள். அவர்களிடம் ‘பான் கார்டு’ குறித்த விவரங்கள் கேட்கப்படும் போது, நிச்சயம் அவர்களிடம் ‘பான் கார்டு’ இருக்காது. அப்படியே இருந்தாலும், தேவையற்ற இடைஞ்சல் ஏற்படும் என்று நினைக்கிறார்கள். இதனால் தங்களது ஊரில் உள்ள பிற நகைக்கடைகளுக்கு குறிப்பாக ‘பில்’ போடப்படாத கடைகளுக்கு சென்று நகை வாங்கும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.
இதனால் அரசுக்கு தான் வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே நகைக்கடைகளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் ‘பான் கார்டு’ விவரம் தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறையை மாற்றவேண்டும். இதற்கான உச்ச வரம்பை ரூ.10 லட்சம் என்று மாற்றி அறிவிக்கவேண்டும். பொதுமக்களின் சிரமம் மற்றும் எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இன்று (புதன்கிழமை) ஒருநாள் அடையாள கடையடைப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இன்று இந்தியா முழுவதும் உள்ள நகைக்கடைகள் அடைக்கப்படும். என அவர் கூறினார்.