இந்திய இராணுவம் பிரமாண்ட போர் ஒத்திகை!

இந்திய விமானப்படையின் வலிமையை பறைசாற்றும் வகையிலும், போரின்போது அதிநவீன ஆயுதங்களை கையாளும் திறனை வெளிப்படுத்தும் வகையிலும் பிரமாண்ட போர் ஒத்திகை நடைபெற்றது. அணுகுண்டு சோதனைகளுக்கு புகழ்பெற்ற ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் உள்ள தார் பாலைவனத்தில் இந்நிகழ்ச்சி, பகலிலும், இரவிலும் நடைபெற்றது.

‘இரும்புக்கை-2016’ என்று பெயரிடப்பட்ட இந்த ஒத்திகையில், சுகோய், மிராஜ், மிக், ஜாகுவார், தேஜாஸ் என அனைத்துரக போர் விமானங்களும் பங்கேற்றன. மொத்தம் 180-க்கும் மேற்பட்ட விமானங்கள், சாகசங்கள் நிகழ்த்தி காட்டின. முதலில், 1930-களில் பயன்படுத்தப்பட்ட டைகர் மோத் விமானம் சாகசம் நிகழ்த்தியது.

ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக செலுத்திக் காட்டப்பட்டது. முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட தேஜாஸ் விமானம், லேசர் குண்டுகளை வீசிக்காட்டியது. விமானத்தில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கவல்ல ஏவுகணையையும் செலுத்தியது. இலகுரக ஹெலிகாப்டர் மூலம் ராக்கெட் வீசப்பட்டது. தோளில் சுமந்து செலுத்தக்கூடிய ஏவுகணையும் இயக்கிக் காட்டப்பட்டது.

‘கருட்’ கமாண்டோ படையைச் சேர்ந்த 24 கமாண்டோக்கள், குளோப்மாஸ்டர் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்து தங்கள் போர்த்திறமையை காண்பித்தனர். இருள் சூழ்ந்த பிறகும், சில போர் விமானங்கள், இரவு நேர தாக்குதலிலும், எந்த வானிலையிலும் தங்களால் இலக்குகளை குறிவைத்து தாக்க முடியும் என்று நிரூபித்துக்காட்டின.

இந்த பிரமாண்ட போர் ஒத்திகையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கண்டுகளித்தனர். ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர், விமானப்படை தளபதி அருப் ராஹா, ராணுவ தளபதி தல்பிர் சுஹாக், கடற்படை தளபதி ஆர்.கே.தோவன் உள்ளிட்டோரும் பார்த்து ரசித்தனர்.

இந்தியாஇராணுவம்ஒத்திகைஜனாதிபதிபிரதமர்போர்விமானப்படை
Comments (0)
Add Comment