இந்தியாவில் உள்ள அணுசக்தி கட்டமைப்புகளுக்கு பாகிஸ்தானில் இருப்பதைப் போல் பெரியளவில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இல்லை; ஆனால் உள்ளிருப்பவர்களால் அதிக ஆபத்து உள்ளது’ என அமெரிக்காவில் இருந்து வெளியான ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் மாசாசூஸெட் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ‘ஹார்வர்ட் கென்னடி ஸ்கூல்’ கல்வி மையம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் உள்ள அணுசக்தி கட்டமைப்புகளுக்கு நாட்டுக்குள்ளேயே செயல்படும் சிலரால் ஆபத்து ஏற்படும் நிலைமை உள்ளது. கடந்த 2014ல் சென்னை அருகே உள்ள கல்பாக்கம் அணுசக்தி நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப்., தலைமை கான்ஸ்டபிள் விஜய்சிங் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
பாதுகாவலர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டபோதும், விஜய்சிங் எந்த நேரத்திலும் வெடிகுண்டை போல் வெடிக்கத்தக்கவர் என்பதை கண்டறிய முடியாமல் போனது. அணுசக்தி கட்டமைப்புகளை பாதுகாக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருப்பினும் சமீபத்தில் கிடைத்துள்ள தகவல்கள், இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள், வலுவற்றதாக இருப்பதை உணர்த்துகின்றன. பாகிஸ்தானில் மேற்கொள்ளப்படுவதை விட, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பானதாக இல்லை.
இந்தியாவில் உள்ள பாபா அணுசக்தி ஆராய்ச்சிமையத்துக்கு 2008ல் அமெரிக்க நிபுணர்கள் சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு அமலில் இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக மோசமானதாக இருப்பதை அறிய முடிந்தது. இந்திய அணுசக்தி கட்டமைப்பு களுக்கும், உள்நாட்டிலும், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளிடமிருந்தும் அச்சுறுத்தல் உள்ளது, என்று அதில் கூறப்பட்டுள்ளது.