வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் சீனாவின் துாண்டுதலுடன், அவ்வப் போது, போராட்டங்கள் வெடித்து வந்ததால், பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமல்படுத்தப்பட்டது.
பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்களை துன்புறுத்துவதாகவும், ஆயுதப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளா, 2000ம் ஆண்டில், உண்ணாவிரதம் துவங்கினார்.
இந்த போராட்டம், 16 ஆண்டுகளாக நீடித்தது. இந்நிலையில் கடந்த, 16 ஆண்டு கால உண்ணாவிரதத்தை முடித்ததை தொடர்ந்து, கடந்த 9-ம் தேதி(ஆக.,9) ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
மேலும் மாநில மக்கள் உரிமையை நிலைநாட்ட முதல்வர் பதவிக்கு போட்டியிடப்போவதாக இரோம் சர்மிளா அறிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு மாநிலத்திற்கு வெளியே பெரும் ஆதரவு கிடைத்தாலும், மணிப்பூரில் ஆதரவும், எதிர்ப்பும் வெளிப்பட்டது.
இந்நிலையில் அவரிடம் வாக்காளர் அடையாள அட்டையோ, பான் கார்டோ, வங்கிக் கணக்கோ எதுவும் இல்லை. இது அவரது அரசியல் ஈடுபாட்டுக்கு பெரும் சிக்கலை உண்டுபண்ணியுள்ளது. அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததை அவரது சகோதரரும் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து இரோம் சர்மிளா கூறியதாவது: எனக்குரிய அடையாள அட்டைகளைப் பெறுவது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எனக்கு அழைப்புகள் வருகிறது.
மணிப்பூரை விட்டு வெளி மாநிலங்களுக்குச் செல்ல, எனக்கு அடையாள அட்டை அவசியம். அடையாள அட்டை பெறுவதே தற்போது எனக்கு முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.