தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வை காண முயற்சிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், உலக தமிழர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையில் பேச்சு சுதந்திரம் மற்றும் நீதித்துறையில் தற்போது உரிய முனைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அரசியல் அமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதன் ஊடாக இலங்கையின் அரசியலில் நீண்டகால நலனை எதிர்பார்க்கலாம். வடக்கு மாகாணத்துக்கு சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டமை முக்கியமான விடயமாக அமைந்துள்ளது. எனினும் தமிழ் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகத்தினரின் பிரச்சினைகளுக்கான தீர்வில் தாமதம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றல், காணாமல் போனோர் விடயத்தில் நீதி கிடைக்கச் செய்கின்றமை போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கம் உரிய கவனத்தை செலுத்த வேண்டும். அத்துடன் வடக்கு கிழக்கில் அதிக இராணுவ பிரசன்னம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துதல் அவசியம். அதேநேரம் பல ஆண்டுகளால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
கடந்த வாரம் ஜனாதிபதி வடக்குக்கு சென்றிருந்த போது அங்குள்ள மக்கள் அடைந்துள்ள துன்பங்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். இந்தநிலையில் குறித்த விடயங்களில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று உலக தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.