இஸ்ரேலின் தரைப்படை பாலஸ்தீனத்தின் காஸா பகுதிக்குள் நுழைந்து விரிவான தாக்குதலை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது காஸா நகரில் இருந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்படும் ராக்கெட் ஏவுதளங்களை கண்டறிந்து அழிப்பதற்காக இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
சிறப்புப் பயிற்சி பெற்ற கமாண்டோ படை கடும் தாக்குதலில் ஈடுபட்டபோது, 4 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் பார்ஸிலாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், லெபனானில் இருந்து இஸ்ரேலின் கடலோரப் பகுதியான நகாரியா நகரின் மீது வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன.
அந்தப் பகுதி லெபனான் எல்லையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள குடியிருப்புகளற்ற பகுதியாகும். எனவே, உயிரிழப்பு ஏற்படவில்லை. ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக சிறிய பாலஸ்தீன குழு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனக் கருதுகிறோம்’ என்று அந்தச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
முன்னதாக, வடக்கு காஸா பகுதியில் மக்கள் பாதுகாப்பாக வீடுகளை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் விமானத்தின் மூலம் எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்களை சனிக்கிழமை வீசியது.அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.நா. அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்த வண்ணமாக உள்ளனர்.
160 பேர் பலி, 1000 பேர் காயம்: இதனிடையே, இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில் 160 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்ததாகவும் காஸா மருத்துவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “காஸா நகரில் பொதுமக்கள் தொடர்புடைய அமைப்புகள், ஹமாஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் பள்ளிவாசல்கள், ஏவுகணை ஏவுதளங்கள், உள்ளிட்டவற்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது’ என்று இஸ்ரேல் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. வலியுறுத்தல்: இதனிடையே, “இஸ்ரேலும், ஹமாஸ் தீவிரவாதிகளும் சர்வதேச மனிதநேய சட்டத்துக்கு மதிப்பளித்து காஸாவில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். 2012ஆம் ஆண்டு நவம்பரில் மேற்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மேற்கொள்ள வேண்டும்’ என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இரு தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளது.