இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்த ஜோர்டான்

ஜோர்டானிய விமானப் படை விமானியை இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் கொன்றதற்குப் பதிலடியாக, ஜோர்டான், தான் சிறைப்பிடித்து வைத்திருந்த இரண்டு தீவிரவாதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டதாக அறிவித்திருக்கிறது.

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நேற்று ஜோர்டானிய விமானி, முவாத் அல் கசாஸ்பெயை ஒரு கூண்டில் அடைத்து தீயிட்டுக் கொளுத்திக்கொன்றிருந்தார்கள்.

இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையில், ஜோர்டானிய அரசு சிறைப்பிடித்து வைத்திருந்த சஜிதா அல் ரிஷாவி மற்றும் அல் கயீதா போராளி ஸியாத் கர்போலி ஆகியோரைத் தூக்கிலிட்டிருக்கிறது.

இவர்களில் சஜிதா என்ற பெண், ஒரு தற்கொலை குண்டு வைக்கும் முயற்சி செய்து கைதானவர். 2005ல் நடந்த இந்த சம்பவத்தில் 60 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

ஸியாத் கர்போலி 2008ம் ஆண்டில் ஜோர்டானியப் பிரஜை ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்.

இவர்களில் சஜிதாவின் விடுதலையை இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் கோரியிருந்தனர் .

ஜோர்டானிய விமானி தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், ஜப்பானிய பிரதமர் ஷின்ஷே அபெயும் கண்டனம் செய்திருக்கின்றனர்.

அரசுஇஸ்லாம்கொல்லுதல்சிறைஜோர்டான்தீவிரவாதம்படைபதிலடிபிடிப்புமரணதண்டனைவிமானம்விமானி
Comments (0)
Add Comment