பாரமுல்லா மாவட்டம், உரியில் உள்ள ராணுவ முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 18 வீரர்கள் பலியாகினர்.
இத்தாக்குதலை பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் குறித்து தகவலறிந்த ராஜ்நாத் சிங், உயரதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
பின்னர் சம்பவம் குறித்து ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் என்.என். வோரா, மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
இந்நிலையில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளியுறவுத் துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சகத்தில் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
அப்போது உள்துறை, பாதுகாப்புத் துறை ஆகிய அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள், புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி, எல்லைக் கோடு பகுதி ஆகியவற்றில் தற்போது நிலவும் சூழல் குறித்து ராஜ்நாத் சிங்குக்கு விவரித்தனர்.
எல்லைக் கோடு வழியாகவும், பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லை வழியாகவும் பயங்கரவாதிகளின் ஊடுருவலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ராஜ்நாத் சிங் எடுத்துரைத்துள்ளார்.
உரி தாக்குதலின்போது பாதுகாப்புப் படையினரின் பதிலடித் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். பாகிஸ்தான் நாட்டின் அடையாளம் பொறித்த ஆயுதங்கள், உணவு, ஆற்றல் பானங்கள் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை கொல்லப்பட்ட அந்த 4 பயங்கரவாதிகளும் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஆதாரங்களை அந்நாட்டிடம் சமர்ப்பிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
அத்துடன், பல்வேறு உத்திகளைக் கொண்டு பாகிஸ்தானுக்கு எதிராக பதிலடித் தாக்குதல் நடத்தவும் இந்தியா உத்தேசித்துள்ளதால் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை செயலாளரின் பங்கேற்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
காஷ்மீரில் உள்துறைச் செயலாளர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம், உரி தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெஹரிஷி காஷ்மீர் சென்றுள்ளார்.
உரி பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்து 2 நாள்களுக்குப் பிறகு, அங்குள்ள நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக செவ்வாய்க்கிழமை காஷ்மீர் சென்றுள்ள ராஜீவ் மெஹரிஷி, மாநில ஆளுநர் என்.என்.வோரா, முதல்வர் மெஹபூபா முஃப்தி ஆகியோரை சந்தித்தார்.
பின்னர் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் நிலவி வரும் பதற்றமான சம்பவம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.