ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு 834 வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது என்று பதுளை, மொனராகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஊவா மாகாண சபை தேர்தலில் மாலை 4 மணி வரை பதுளை மாவட்டத்தில் 60 வீதமான வாக்குகளும், மொனராகலை மாவட்டத்தில் 55 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் 516 மத்திய நிலையங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் 318 நிலையங்களிலும் வாக்களிப்பு இடம்பெற்றன. வாக்களிப்பில் பாரிய அசம்பாவிதங்கள் ஏதும் இடம்பெறாத போதிலும் இரு மாவட்டங்களிலும் ஆங்காங்கே சிறுசிறு தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. மாலை 6 மணியளவில் தபால் மூல வாக்குகள் எண்ணும்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவுக்கு முன்னர் முதலாவது பெறுபேற்றை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.