பொது எதிரணியின் பின்னாலோ பொதுவேட்பாளராகிய எனக்குப் பின்னாலோ, எந்த வெளிநாட்டு சக்திகளும் இல்லை என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்றிரவு தனியார் தொலைக்காட்சியொன்றின் நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எமக்குப் பின் எந்த வெளிநாட்டுச் சக்தியும் இல்லை என்பதை உறுதிபடக் கூறுகின்றேன். நாட்டு மக்களின் நலனுக்காகவே நாங்கள் இணைந்திருக்கின்றோம். இதனைக் குழப்புவதற்காக எம்மீது தேவையில்லாமல் பழி போடுகிறார்கள்.
ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கின்றமை மகிழ்ச்சி தருகிறது. காரணம், அன்றையதினம் தான் பண்டாரநாயக்கவின் பிறந்ததினம். அவரது கட்சிக்கு புத்துயிர் கிடைக்கும் தினமாக அன்றைய தினம் அமையவிருப்பதால், பண்டாரநாயக்கவின் ஆசை நிறைவேறும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எந்த நிகழ்வு நடைபெறும் போதும் எஸ்.டபிள்யூ.ஆர். டி. பண்டாரநாயக்க மற்றும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆகியோரை நினைவு கூருவதை நிறுத்துமாறு மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார். 2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்த உத்தரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான எனக்கு விடுக்கப்பட்டது.
இன்று காலை செய்தியாளர் சந்திப்பின் போது என் மீது குற்றம் சுமத்திய அமைச்சர்களான அநுர பிரியதர்சன யாப்பா, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி தொடர்பாக என்னிடம் அதிருப்தியை வெளியிட்டவர்கள் தான் என்றும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.