இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். இதுகுறித்து, வெள்ளை மாளிகையில் இருந்து வியாழக்கிழமை இரவு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
சமீப காலமாக ஐ.எஸ் தீவிரவாதிகள் இராக் முழுவதும் தாக்குதல் நடத்தி முக்கிய நகரங்களைக் கைப்பற்றி வருகின்றனர். வடமேற்குப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில், தீவிரவாதிகளின் பிடியில் ஆயிரக்கணக்கான யாசிதி சிறுபான்மையின மக்கள் சிக்கியுள்ளனர்.
அவர்கள் உணவு, குடிநீர் இல்லாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களும் அங்கு அபாயத்தில் உள்ளனர். அந்தப்பகுதியில் இராக் படையினருக்கு அமெரிக்க ராணுவம் உதவி செய்து வருகிறது.
குர்து இன மக்கள் அதிகம் வசிக்கும் எப்ரில் நகரைக் கைப்பற்றுவதற்காக தீவிரவாதிகள் முன்னேறிச் சென்றால், அவர்கள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தும். அதேவேளையில், இராக்கில் மற்றொரு போரை அமெரிக்கா நிகழ்த்தாது.
உலகப் பாதுகாப்புக்கு அமெரிக்காவின் தலைமை அவசியம்: உலகப் பாதுகாப்புக்கு அமெரிக்காவின் தலைமை அவசியம் என்றும், உலகப் பாதுகாப்பையும், வளமையையும் அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
நமது நட்பு நாடுகள் ஆபத்தில் இருக்கும்போது அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம். சர்வதேச உறவுகளை வலியுறுத்தும் விதமாக, பல்வேறு நாடுகளின் கூட்டமைப்புகளை வழிநடத்திச் செல்கிறோம்.
ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் இருந்த பெரும்பான்மையான அமெரிக்க ராணுவ வீரர்களை, எனது நிர்வாகம் மீண்டும் நாட்டுக்கு திரும்ப அழைத்து வந்துள்ளது. ஆனால் அமெரிக்க மக்களின் வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பட்சத்தில், தேவையான நடவடிக்கையை எடுப்போம்.
இராக்கில் மீண்டுமொரு போர் நடைபெறும் பட்சத்தில், அமெரிக்கப் படைகளின் தலைவர் என்ற முறையில், அமெரிக்கா அதில் ஈடுபடுவதை என்னால் அனுமதிக்க முடியாது என்று ஒபாமா கூறினார்.
இதனிடையே, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இராக்கில் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது. சிஞ்சார் மலைப்பகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரவாதிகள் ஈடுபட்டால், அதைத் தடுக்கும் விதமாக இராக் ராணுவத்துக்கு அமெரிக்கா உதவி செய்யும்.
மேலும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் உள்ள சிஞ்சார் மலைப்பகுதியில் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பொட்டலங்களை வான் வழியாக அமெரிக்க ராணுவம் வீசி வருகிறது என்று சக் ஹேகல் கூறினார்.
தீவிரவாதிகளின் பிடியில் அணை: இதனிடையே, பாக்தாத் நகரில் பாயும் டைக்ரிஸ் ஆற்றில் கட்டப்பட்ட மோசுல் அணையை தீவிரவாதிகள் கைப்பற்றினர். அந்த அணையில், இராக்கின் மிகப்பெரிய நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அந்தப் பகுதியில் இருந்த குர்துப் படைகளை விரட்டிவிட்டு, அணையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தீவிரவாதிகள் கொண்டு வந்தனர்.