மத்திய தரைக்கடல் மார்க்கமாக ஐரோப்பாவுக்கு வர முயன்று,மரணமடையும் ஆப்ரிக்கர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு முன்னெப்போதையும் விட அதிகமாக இருப்பதாக சர்வதேச குடியேற்ற அமைப்பு ( ஐ.ஓ.எம்) கூறுகிறது.
இந்த ஆண்டு மட்டும் ஏப்ரல் வரையிலுமே, சுமார் 1,700க்கும் மேற்பட்டவர்கள் இந்த கடல் கடக்கும் முயற்சியில் இறந்திருப்பதாக அது கூறுகிறது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 96 பேர்தான் இது போன்ற முயற்சிகளில் இறந்திருந்தார்கள் என்று அது கூறுகிறது.
கடந்த ஞாயிறன்று, இத்தாலியத்தீவான லேம்படுசாவின் தெற்கே, லிபியாவின் கடல் பரப்பில் நடந்த விபத்தில் சுமார் 800 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். இந்த மரண விகிதம் தொடர்ந்தால், இந்த ஆண்டு இது போன்ற முயற்சிகளில் இறக்கும் குடியேறிகளின் எண்ணிக்கை 30,000த்தைத் தொடும் என்று ஐ.ஓ.எம் நம்புகிறது.
இத்தாலியக் கடற்படையினர் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்குவோரைக் காப்பாற்ற கடுமையாக முயல்கின்றனர் என்று ஒப்புக்கொள்ளும் ஐ.ஓ.எம் அமைப்பின் இத்தாலிய இயக்குநர், பெடெரிக்கோ சோடா, ஆனால் அதிகரித்து வரும் மரணங்கள் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை என்று கூறுகிறார்.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேலும் முழுமையானதாக இருக்கவேண்டும் என்றும், இந்த நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் ஆதரவளிக்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
இது ஒரு மனிதாபிமான அவசரநிலை இதற்கான பதில் நடவடிக்கை என்பது முழுமையானதாக இருக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார்.
அபாயகரமான பயணங்கள்
ஆனால் குடியேறிகளின் பெருந்தொகையான மரணங்கள் மத்திய தரைக்கடல் பகுதியிலேயே நிகழ்ந்துள்ளன என்று ஐ.ஓ.எம் கூறுகிறது. புள்ளிவிவரங்கள் பிரமிக்கவைக்கின்றன. ஞாயிறன்று நடந்த விபத்தை சேர்க்காமல் பார்த்தால் கூட , இந்த ஆண்டு ஏற்பட்ட 10 மரண சம்பவங்களில் 8 இந்தப் பகுதியில்தான் நடந்திருக்கின்றன.
ஒப்பீட்டளவில், இதற்கு அடுத்தபடியாக மரணங்கள் நிகழும் பகுதி, ஆப்ரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் பகுதிதான். அங்கு பத்தில் ஒரு மரணங்களே நடந்திருக்கின்றன.
மத்திய தரைக்கடல் மரணங்களைப் பார்த்தால், அங்கு வருபவர்களில் பெரும்பாலோனோர், சஹாராவுக்கு தெற்கே உள்ள ஆப்ரிக்கப் பகுதியிலிருந்து வருபவர்கள்தான்.
மேலும் ஆபத்தான பாதைகள்
மத்திய தரைக்கடல் பகுதியிலேயே பார்த்தால், வட ஆப்ரிக்காவிலிருந்து இத்தாலிக்கும் மால்டாவுக்கும் வரும் மையமான குடியேற்றப் பாதைதான் மிகவும் ஆபத்தானது.
இந்த ஆண்டு இதுவரை இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் முயற்சியில் 910 பேர் இறந்துள்ளனர். ஞாயிறன்று நடந்த சம்பவத்தில் இறந்திருக்கக்கூடிய 800 பேரும் இந்த எண்ணிக்கையில் சேருவார்கள்.
அபுலியா, கலப்ரியா மற்றும் இத்தாலி போன்ற இடங்களை நோக்கி மத்திய தரைக்கடலின் வேறு மார்க்கங்களினூடாக பயணம் செய்வோரிலும் சிலர் இறக்கிறார்கள்.
கடந்த ஆண்டு , மொத்தம் 3,279 குடியேறிகள் ஐரோப்பாவுக்குக் கடல் மார்க்கமாக வர முயன்று மரணித்தனர். இதிலும் பெரும்பாலோனோர் மத்திய மத்தியதரைக்கடல் பாதையிலேயே இறந்தனர்
யார் இவர்கள் ?
ஐரோப்பாவுக்கு வர இவ்வளவு பிரயாசைப்படும் இவர்கள் பெரும்பாலும் ஆப்ரிக்கர்களே. அதிலும், மாலி, நைஜீரியா மற்றும் எரித்ரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் இந்த ஆபத்தான பயணங்களை கடந்த ஆண்டில் மேற்கொண்டவர்கள். இவர்களில் பெரும்பாலோனோர் இத்தாலி வந்தடைகிறார்கள்.
இந்தப் பயணங்களை துணிச்சலாக மேற்கொள்வோர் பெரும்பாலும் ஆண்கள்.