பாலஸ்தீன சுயாட்சி பகுதியான காசா முனை பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினர் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு வெவ்வேறு கொலை வழக்குகளில் 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தண்டிக்கப்பட்டவர்களின் மேல்-முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இருப்பினும் அவர்கள் 3 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் அங்குள்ள மத்திய சிறையில் 3 பேரில் 2 பேரை சுட்டுக்கொன்றும், ஒருவரை தூக்கில் போட்டும் நேற்று மரண தண்டனையை நிறைவேற்றினர். மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு பாலஸ்தீன அதிபர் மகமது அப்பாஸ் ஒப்புதலை பெறாமலேயே காசாமுனை ஆட்சியாளர்கள், இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக ரமல்லா நகரில், பாலஸ்தீன அட்டார்னி ஜெனரல் அகமது பிரேக் கருத்து தெரிவிக்கையில், “3 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றி இருப்பது சட்டவிரோதம். பாலஸ்தீன அடிப்படை சட்டத்துக்கு முரணானது” என கூறினார்.