மத்திய அமெரிக்க நாடு, கவுதமாலா. அந்த நாட்டின் தலைநகரான கவுதமாலாவில் இருந்து 25 கி.மீ. தென்மேற்கில் அமைந்துள்ள சான் ஜோஸ் பினுலா நகரில் அரசு சார்பில் நடத்தப்படுகிற குழந்தைகள் காப்பகம் ஒன்று உள்ளது.
இங்கு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட சிறுவர், சிறுமியர் தங்கி உள்ளனர். கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய இளைஞர்களும் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர்.400 பேர் மட்டுமே தங்கும் வசதியுள்ள இந்த காப்பகத்தில் அதை விட மிக அதிக எண்ணிக்கையில் சிறுவர், சிறுமியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு, அந்த காப்பகத்தின் ஊழியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், அங்கு தரமான உணவு வழங்கப்படாததாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, அங்கு தங்கி இருந்த இளைஞர்கள் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது சில இளைஞர்கள் அங்கு மெத்தைகளில் தீ வைத்து விட்டு தப்பி விட்டதாக கூறப்படுகிறது.
இதில் தீ மளமளவென பரவியது. அங்கு தங்கி இருந்த சிறுமிகள் ஓலமிட்டவாறு நாலாபுறமும் ஓடினர். ஆனாலும் தீயின் கொடிய தாக்குக்கு அவர்கள் அத்தனை பேராலும் தப்பிவிட முடியவில்லை.
22 சிறுமிகள் தீயில் சிக்கி கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் 14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள். அவர்களது உடல்கள் அடையாளம் காண இயலாத வகையில் கரிக்கட்டைகள் ஆகி விட்டன.
சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர். சில துடிப்பான குழந்தைகள் உடனடியாக அங்கிருந்து தப்பி, உயிர் பிழைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். போலீசாரும், மீட்பு படையினரும் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அந்த கொடிய சம்பவத்துக்கு அந்த நாட்டின் அதிபர் ஜிம்மி மொராலஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 3 நாள் தேசிய துக்கமும் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக அதிபர் அலுவலகம் கூறுகிறது.
“இந்த துயர சம்பவம், நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கும் வெட்கக்கேடானது” என்று அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மரியா யூஜினியா மொராலஸ் கூறி உள்ளார்.
கவுதமாலாவில் உள்ள ஐ.நா. குழந்தைகள் நிதியமும், இந்த சம்பவத்துக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதுபற்றி அந்த அமைப்பு டுவிட்டரில், “இந்த துயர சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளும், இளம் பருவத்தினரும் பாதுகாக்கப்பட வேண்டும்” என கூறி உள்ளது.