எகிப்தின் அலெக்ஸாண்ட்ரா நகரிலிருந்து கெய்ரோ நகருக்கு பயணித்த எகிப்துஎயார் விமானசேவை விமானமான எம்.எஸ். 181 என்ற உள்நாட்டு விமானமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் 81 பயணிகளும் 5 விமான ஊழியர்களும் பயணித்ததாக எகிப்து எயார் விமானசேவை நிறுவனம் தெரிவிக்கிறது. தொடர்ந்து திசைமாற்றப்பட்டு சைப்பிரஸிலுள்ள லார்னகனா நகரில் தரையிறக்கப்பட்ட அந்த விமானத்திலிருந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன் விமானக் கடத்தலில் ஈடுபட்ட வரான செயிப் எல் டின் முஸ்தபா கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி விமான கடத்தல் செயற்பாட்டுக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பு கிடையாது என சைப்பரஸ் ஜனாதிபதி நிகொஸ் அனஸ்ராஸியடெஸ் தெரிவித்துள்ளார்.
அந்த விமானத்தை கடத்திய எகிப்திய – அமெரிக்கப் பிரஜையான பயணி, தன்னிடமிருந்து பிரிந்து சைப்பிரஸில் வாழும் தனது மனைவியைப் பார்த்துப் பேச வேண்டும் எனக் கோரியதாகவும் இந்நிலையில் அந்தப் பெண் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த விமானத்திலிருந்த அனைவரையும் பாதுகாப்பாக விடுவிப்பதற்கு தாம் முன்னுரிமை கொடுத்துள்ளதாக சைப்பிரஸ் ஜனாதிபதி ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையில் கூறினார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் விமானத்தைக் கடத்தியவர் காதலால் துண்டப்பட்டா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டார் என வினவிய போது, ” எந்த விடயத்திலும் எப்போதும் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருக்கிறார்” என அவர் சிரித்தவாறு பதிலளித்துள்ளார்.
மேற்படி விமானத்தைக் கடத்திய நபர் விமானக் கட்டுப்பாட்டுக் கோபுரத்துடன் தொடர்பை ஏற்படுத்தி விமானத்தை சைப்பிரஸுக்கு திசைதிருப்பக் கோரியுள்ளார்.
அவர் தான் வெடிபொருட்களைக் கொண்ட பட்டியை அணிந்திருப்பதாகவும் தனது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அந்தப் பட்டியை வெடிக்க வைக்கப் போவதாகவும் விமானிக்கும் ஏனையவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக எகிப்திய சிவில் விமான சேவை தெரிவிக்கிறது.
தொடர்ந்து சைப்பிரஸில் விமானம் தரையிறக்கப்பட்டதையடுத்து அந்த விமானத்திலிருந்த பயணிகளையும் உத்தியோகத்தர்களையும் விடுவிக்க கடத்தல்காரருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அந்த விமானத்தில் பயணித்தவர்களில் 8 அமெரிக்கர்கள், 4 பிரித்தானியர்கள், 4 நெதர்லாந்து நாட்டவர்கள், ஒரு பிரான்ஸ் நாட்டவர் உட்பட 21 வெளிநாட்டவர்கள் உள்ளடங்குவதாக எகிப்திய சிவில் விமான சேவை நிறுவனம் தெரிவிக்கிறது.
மேற்படி கடத்தல் நாடகத்தையடுத்து சைப்பிரஸின் தென் கடற்கரைப் பிராந்தியத்திலுள்ள லார்னகா விமான நிலையம் மூடப்பட்டு அந்த விமான நிலையத்துக்கான விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பில் நெருக்கடி முகாமைத்துவ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சைப்பிரஸ் வெளிநாட்டு அமைச்சு தெரிவித்தது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் எகிப்திய சினாய் தீபகற்பத்திற்கு மேலாக ரஷ்ய விமானமொன்று வெடித்துச் சிதறி அதில் பயணித்த 224 பேரும் உயிரிழந்த சம்பவத்தையடுத்தே இந்த விமான கடத்தல் நாடகம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த ரஷ்ய விமானத்தில் குண்டொன்றை எடுத்துச் சென்று வெடிக்க வைத்திருந்ததாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமைகோரியிருந்தனர்.
லார்கனா நகருக்கு இதற்கு முன்னரும் பல விமானங்கள் கடத்தப்பட்டு திசைமாற்றப்பட்டு தரையிறக்கப்பட்டிருந்தன.
1996 ஆம் ஆண்டில் சூடானிய எயார்வேய்ஸ் விமானமொன்று 199 பயணிகளுடன் 7 ஈராக்கியர்களால் கடத்தப்பட்டு திசைமாற்றப்பட்டு லார்கனா நகர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருந்தது.