கிரேக்கத்திற்கு வரும் குடியேறிகள் மீண்டும் துருக்கிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற புதிய உடன்படிக்கை ஒன்று அமலுக்கு வந்துள்ள சூழலிலும் குடியேறிகளை ஏற்றிக் கொண்டு படகுகள் கிரேக்கத்தை வந்தடைந்து கொண்டிருக்கின்றன.
கிரேக்க தீவான ரோவிற்கு கிட்டத்தட்ட 40 குடியேறிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்றிலிருந்த இரண்டு பெண்பிள்ளைகள் கடலில் தவறி வீழ்ந்து பலியாகியுள்ளனர். இவர்களில் ஒருவருக்கு இரண்டு வயது என்றும், மற்றொருவருக்கு ஒரு வயது எனவும் கூறப்படுகிறது. இதனிடையே புதிய விதிமுறைகள் தொடர்பில்,கிரேக்கத் தீவான லெஸ்பொஸ்ஸில் குடியேறிகள் குழம்பிப் போய் உள்ளதாகவும் அங்குள்ள பிபிசியின் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். புதிய உடன்படிக்கையின் படி, குடியேறிகளின் கோரிக்கைகளை பரிசீலினை செய்யும் மையத்திற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர்களிடம் விரைவான விசாரணைகள் நடைபெறும்.
அகதித் தஞ்சம் கோராதவர்கள் மற்றும் அகதித் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களும் துருக்கிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவர். துருக்கிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட சிரிய அகதிகள் ஒவ்வொருவரும் அங்குள்ள முகாம்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் குடியமர்த்தப்படுவார்கள். இதேவேளை லிபியாவின் கடற்கரைக்கு அப்பாற்பட்ட பகுதியில் குடியேறிகளை ஏற்றி சென்ற படகு ஒன்று மூழ்கியதாக தெரிவிக்கும் லிபிய கரையோர காவல் படையினர் அதில் பலர் பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
குறைந்தது 4 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளள்ளதுடன் மேலும் குறைந்தது 20 பேர் காணாமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிசிலி நீரிணைப் பகுதியில் வைத்து தாம் 900க்கும் அதிகமான குடியேறிகளை மீட்டுள்ளதாக இத்தாலி தெரிவித்துள்ள அதேவேளை, சனிக்கிழமை 3 படகுகளிலிருந்து 600 பயணிகளை மீட்டதாக லிபியா தெரிவித்துள்ளது.