குடியரசு தின விழா அணிவகுப்பின் போது வானில் பறந்த மர்ம பலூன்

டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற்ற போது, ராஜஸ்தான் மாநிலத்தில் வானில் பறந்து வந்த மர்ம பலூனை, போர் விமானம் விரைந்து சென்று சுட்டு வீழ்த்தியது.  

டெல்லியில் உள்ள ராஜபாதையில் நேற்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பிரான்சு அதிபர் ஹாலண்டே கலந்து கொண்டார். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்ததால், ராஜபாதையை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. டெல்லி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வான்வெளி பகுதியும் கண்காணிப்பில் இருந்தது. டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடந்து கொண்டிருந்த போது காலை 10.30 முதல் 11 மணிக்குள், அண்டை மாநிலமான ராஜஸ்தானில் உள்ள பார்மர் என்ற இடத்தின் அருகே வானில் பலூன் போன்ற மர்ம பொருள் ஒன்று பறந்த வருவது ‘ரேடார்’ மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே இதுபற்றி ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பாதுகாப்பு படையினர் ‘உஷார்’ படுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அந்த தளத்தில் இருந்து சு–30 எம்.கே.ஐ. ரக போர் விமானம் ஒன்று மர்ம பொருள் பறந்த திசையை நோக்கி விரைந்தது. சிறிது நேரத்தில் மர்ம பொருள் பறந்த இடத்தை நெருங்கிய அந்த விமானம், மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது. அந்த மர்ம பொருள் கீழே விழுந்ததால் தரையில் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை. அந்த மர்ம பொருள் எங்கே இருந்து வந்தது? எப்படி பறந்து வந்தது? என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்கண்ட தகவல்களை இந்திய விமானப்படையின் செய்தித்தொடர்பாளர் டெல்லியில் தெரிவித்தார்.

அணிகுடியரசுடெல்லீதினம்பலூன்மர்மமானிலம்ராஜஸ்தான்வகுப்புவிழா
Comments (0)
Add Comment