கென்யா தலைநகர் நைரோபியில் பலத்த மழை காரணமாக அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டடம் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து நைரோபி காவல்துறை வட்டாரங்கள் கூறியதாவது: கென்யாவில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையில், தலைநகர் நைரோபியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டது. நகரில் மக்கள் நெருக்கம் மிகுந்த, பின் தங்கிய ஹரூமா பகுதில் அமைந்துள்ள 6 மாடிக் குடியிருப்பு, மழை காரணமாக இரவு இடிந்து விழுந்தது. இதில் 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்ட 121 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அந்தக் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் 150 குடும்பங்கள் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இடிந்து விழுந்த கட்டடத்துக்கு அருகே உள்ள மேலும் இரு கட்டடங்கள் ஆபத்தானவை என்று அறிவிக்கப்பட்டு, அதிலிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
அதே சமயம், கட்டடம் இடிந்து விழுந்து 10 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 7 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தன. இடிந்து விழுந்த கட்டடம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கட்டப்பட்ட இரண்டே ஆண்டுகளில் அந்தக் கட்டடம் மழையில் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என நைரோபியின் துணை ஆளுநர் ஜானதன் மியூகே தெரிவித்தார்.