இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர், ரஷ்யத் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பதாக அரசு சாரா அமைப்புகள் தொடர்ந்து தெரிவித்து வருவது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்யத் தாக்குதல்களில் மருத்துவமனைகள், பள்ளிகள், சந்தைப்பகுதிகள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர கால பணியாளர்கள் பலர் உயிரிழந்ததாகவும் வரும் செய்திகள் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய வெளியுறவு அமைச்சருடனான தொலைபேசி வாயிலாகப் பேசியதாகவும் டோனர் குறிப்பிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு ரஷ்யத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் ரஷ்யா இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என பதில் அளித்திருந்தது.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சிரியாவில் அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாகவும், ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் ரஷ்யப் படைகள் வான்தாக்குதல்களை தொடங்கியது.