சிரியா படையினரிடமிருந்து கைப்பற்றிய போர் விமானங்களை இயக்க, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் இராக் அதிபர் சதாம் உசைன் படையில் பணியாற்றிய போர் விமானி ஒருவர் பயங்கரவாதிகளுக்கு அந்தப் பயிற்சியை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, சிரியா மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு (எஸ்.ஓ.ஹெச்.ஆர்.) வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: சிரியாவின் அலெப்போ, ராக்கா மாகாணங்களில் சிரியா படையிடமிருந்து ஐ.எஸ். அமைப்பினர் சில விமான தளங்களைக் கைப்பற்றினர்.
இதன் மூலம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில போர் விமானங்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வசமாகியுள்ளன. அவை மிக்-21, மிக்-13 ரக போர் விமானங்கள் எனத் தெரிகிறது. எனினும், அவை பறக்கும் நிலையில் உள்ளனவா, அவற்றில் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து தெரியவில்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு அந்த விமானங்களை இயக்குவதற்கான பயற்சி அளிக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
முன்னாள் இராக் அதிபர் சதாம் உசைனின் விமானப் படையில் பணியாற்றிய அதிகாரி ஒருவர், அலெப்போ மாகாணத்தின் ஜர்ரா நகர ராணுவ விமான தளத்தில் இந்தப் பயிற்சிகளை மேற்பார்வையிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது என்று எஸ்.ஓ.ஹெச்.ஆர். அமைப்பு தெரிவித்தது.ஜர்ரா நகரில், போர் விமானங்கள் தாழ்வாகப் பறப்பதை அடிக்கடி பார்ப்பதாக அங்கு வசிப்பவர்கள் தெரிவித்தனர். ராடாரின் பார்வையிலிருந்து தப்புவதற்காக, விமானங்களை பயங்கரவாதிகள் குறைவான உயரத்தில் செலுத்துவதாகக் கூறப்படுகிறது. இராக்கிலும், சிரியாவிலும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் விமானத் தாக்குதல் நிகழ்த்தி வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐ.எஸ்.ஸூக்கு ஆதரவளிக்க உலக முஸ்லிம்களுக்கு அல்-காய்தா அழைப்பு:
இராக்கிலும், சிரியாவிலும் அமெரிக்கக் கூட்டுப் படையினரின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள ஐ.எஸ். அமைப்புக்கு உலக முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும் என அல்-காய்தாவின் யேமன் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “”இயக்கங்களுக்கு இடையில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மதத்துக்கு எதிரான சக்திகள் நம்மைத் தாக்கும்போது, அவற்றுக்கு எதிராகப் போரிட இஸ்லாமியப் போராளிகள் ஒன்றுபட வேண்டும்” என்று கூறியுள்ளது