இன்னும் இரண்டு வாரங்களில் இலங்கை அரசாங்கத்துக்கும் சீன அரசாங்கத்துக்கும் இடையில் நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்தின் தொழில்நுட்ப நடவடிக்கை தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சீன ஜனாதிபதி எதிர்வரும் 16ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.இதன்போது சீன ஜனாதிபதி நுரைச்சோலையின் மின்சார நிலையத்தின் மூன்றாம் கட்ட மின்சார கட்டமைப்பு திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த உடன்படிக்கையின்படி நுரைச்சோலை மின்சார நிலையத்தின் தொழில்நுட்ப பிரச்சினைகள் சீன உதவியுடனேயே தீர்க்கப்படவுள்ளன.
இதேவேளை நுரைச்சோலை மின்சார நிலையத்தின் முகாமையையும் சீனாவுக்கு கையளிப்பது தொடர்பில் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும் சீனாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்படுவதை தாம் எதிர்ப்பதாக மின்சாரசபையின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.