யாழ்.காரைநகர்ப் பகுதியினைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியொருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 7 கடற்படை வீரர்களும் பாதுகாப்பாக காலி கடற்படை தளத்திற்கு மாற்றம்பட்டுள்ளனர். பிணையினில் விடுவிப்பதற்கான அனுமதி வெள்ளிக்கிழமை வழங்க்கப்பட்டிருந்த நிலையினில் சனி ஞாயிறு விடுமுறை தினமாகையினால் கடற்படை வீரர்களின் உறவினர்கள், தங்கள் பகுதி கிராம அலுவலரின் கடிதங்கள் பெற்று நேற்று (21) மன்றில் சமர்ப்பித்து அவர்களை பிணையில் எடுத்துள்ளனர்.
மேற்படி வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஏலாரைக் கடற்படை முகாமிலிருந்த கடற்படைச் சிப்பாய்கள் அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர். எனினும், இதன்போது சிறுமி எவரையும் அடையாளங்காட்டவில்லை. இதனால், அன்றைய தினம் 7 கடற்படைச் சிப்பாய்களையும் பிணையினில் செல்ல நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
பாடசாலை செல்லும் இச்சிறுமியினை ஏலாரை கடற்படை முகாமிற்குள் அழைத்துச் சென்று 11 நாட்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் செவ்வாய்க்கிழமை (15) ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.எனினும் இவ்விடயத்தினில் பாதுகாப்பு செயலாளரது ஆலோசனையின் பேரினில் ஜனாதிபதி மட்டத்தினில் தலையீடுகள் செய்யப்பட்டு விடுவிப்பு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.