ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) சீனாவுக்கு சென்றார். குவாங்டாங் மாகாண தலைநகர் குவாங் சூ நகரில் இந்தியர்கள் அளித்த வரவேற்பில் அவர் பேசினார். அப்போது அவர், வேறுபாடுகளை குறைப்பதுதான் சீனாவுடனான உறவில் இந்தியாவின் கொள்கை என குறிப்பிட்டார்.
தனது பயணத்தின் 2-வது நாளான நேற்று அவர் அங்குள்ள ஹூவாலின் கோவிலுக்கு சென்றார். கி.பி. 527-ம் ஆண்டு, லியாங் வம்சத்தினரால் கட்டப்பட்ட இந்த கோவில் இந்திய புத்த மத துறவியான போதிதர்மாவுடன் நெருங்கிய தொடர்பு உடையதாகும். இந்த கோவிலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்றதை சீனத்தரப்பில் வெகுவாக பாராட்டினர். அதைத் தொடர்ந்து குவாங்டாங் மாகாண சீன கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ஹூ சுன்குவாவை சந்தித்தார். அப்போது அவர் பிரணாப் முகர்ஜிக்கு விருந்து அளித்து கவுரவித்தார். இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.
அப்போது இந்தியாவின் பொருளாதார கொள்கைகளில் ஹூ சுன்குவா மிகுந்த ஆர்வம் காட்டினார். குறிப்பாக அன்னிய நேரடி முதலீடு தொடர்பான இந்தியாவின் கொள்கை அவரை கவர்ந்தது. குவாங் சூ நகருக்கு, தான் வெளியுறவு மந்திரி பதவி வகித்த காலகட்டத்தில் வந்திருந்ததை பிரணாப் முகர்ஜி நினைவுகூர்ந்தார். ஜப்பானியர்கள், கொரிய நாட்டினருக்கு அடுத்து குவாங் சூ நகரில் இந்தியர்கள் பெருமளவில் குடியிருப்பதாக ஜனாதிபதியிடம் கூறப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் கூறும்போது, “இந்தியாவில் நேரடி அன்னிய முதலீட்டினை கவர்கிற வகையில் மேக் இன் இந்தியா என்னும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம், டிஜிட்டல் இந்தியா திட்டம் கொண்டு வந்திருப்பது பற்றி குவாங்டாங் மாகாண சீன கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ஹூ சுன்குவாவிடம் ஜனாதிபதி விளக்கினார்” என்றார். அதைத் தொடர்ந்து இந்திய சீன வர்த்தக சபை கூட்டத்திலும் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ சீன முதலீடுகளை வரவேற்கிறோம். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் சீன தொழில் அதிபர்களின் பங்களிப்பையும் வரவேற்கிறோம்.
இந்தியாவில் சீன முதலீடுகளுக்கு லாபம் கிடைப்பதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகளை எளிதாக்குவோம்” என குறிப்பிட்டார். மேலும், “இரு நாடுகள் இடையே பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்புக்கு திரளான வாய்ப்புகள் உள்ளதாக இந்தியா நம்புகிறது. இந்தியா, இளைஞர்களை அதிகமாக கொண்ட நாடு. நீடித்து நிலைத்து நிற்கத்தக்க வளர்ச்சியை அடைவதற்கு நவீன பொருளாதாரத்தை கட்டமைப்பதுதான் இந்தியாவின் அடிப்படை நோக்கம்” என்றும் கூறினார்.