எபோலா நோய் பாதித்த மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் வரும் டிசம்பர் மாதம் முதல் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு பரிசோதிக்கப்படும். பின்னர் அவை படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் வினியோகிக்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் நேற்று லண்டனில் அறிவித்தது.
மேற்கு ஆப்ரிக்க நாடுகளான கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோனி நாடுகளை எபோலா நோய் கடுமையாக தாக்கியுள்ளது. இதற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு முன் தடுப்பு மருந்துகளை அளிப்பது குறித்து நேற்று லண்டனில் உலக சுகாதார ஆய்வு மைய விஞ்ஞானிகளின் கூட்டம் நடைபெற்றது.
எபோலா நோய் பாதித்த 3 ஆப்ரிக்க நாடுகளில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு முதலில் வரும் டிசம்பர் மாதம் முதல் தடுப்பு மருந்துகளை வழங்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த தடுப்பு மருந்துகள் அவர்களிடையே பரிசோதிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக அனைவருக்கும் வழங்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் உதவி இயக்குநர் ஜெனரல் டாக்டர் மேரி பாலே கென்னி கூறினார். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியா, கினியா மற்றும் சியர்ரா லியோனி ஆகிய 3 நாடுகளில் எபோலா நோய் தாக்கியது. இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களை குணப்படுத்துவதற்கு மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 22ம் தேதிவரை எபோலா நோய்க்கு 9,936 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4,877 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. எபோலாவை தடுப்பதற்கு தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, பல்வேறு கட்டங்களில் நடைபெற்ற பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து, எபோலா நோய் பாதித்த நாடுகளில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த மருந்துகள் வழங்கப்பட்டு பரிசோதிக்கப்படும். எபோலா நோய் பாதித்த ஆப்ரிக்க நாடுகளில் சர்வதேச விமான சேவை மற்றும் வர்த்தகத்துக்கு பொது தடை விதிக்கும் கமிட்டியின் பரிந்துரையை உலக சுகாதார நிறுவனம் நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.