ஜனாதிபதியின் தனிப்பட்ட வைத்தியர் எலியந்த வையிட்டின் கார் மீது துப்பாக்கி பிரயோகம் சந்தேக நபர்களை கைது செய்ய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள்

ஜனாதிபதியின் தனிப்பட்ட வைத்தியர் எலியந்த வையிட்டின் கார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்களை கைது செய்ய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்தார்.  இன்று அதிகாலை 4.30 மணியளவில் மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எதிரிசிங்க வீதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியிருந்தது.

துப்பாக்கி சூடு இடம்பெறும் போது வைத்தியர் எலியந்த வையிட் அந்த காரில் இருக்கவில்லை எனவும் அவரது சாரதி மாத்திரமே அதில் இருந்ததாகவும் சுட்டிகாட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண இதன் போது சாரதிக்கோ வேறு எவருக்கோ காயங்கள் ஏற்பட்டவில்லை என குறிப்பிட்டார்.  மோட்டார் சைக்கிளில் வந்துள்ள துப்பாக்கி தாரிகள் துப்பாக்கி சூட்டின் பின்னர் தப்பிச் சென்றுள்ளனர்.  குறித்த காரின் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணிப்பவரையே துப்பாக்கி தாரி இலக்காக கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகளின் உதவியையும் விசாரணைகளுக்கு பெற்றுகொண்டுள்ளனர்.

பின் ஆசனத்தில் அமர்ந்து பயணிப்பவர் மீது துல்லியமாக இந்த துப்பாக்கி சூட்டை நடத்தும் நோக்குடன் விசேட திறமை கொண்ட துப்பாக்கி தாரி ஒருவரே இதனை மேற்கொண்டிருக்கலாம் என சிரேஷ்ட உதவி இரசாயன பகுப்பாய்வாளர் பி.டி. மடவள தெரிவித்துள்ளார்.  குறித்த கார் மீது மூன்று துப்பாக்கி தோட்டாக்கள் ஊடறுத்துள்ளதுடன் அவை சரியான இலக்கை நோக்கியே பிரயோகிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் காரில் வைத்தியர் எலியந்த பயணிக்காமையினால் உயிர் சேதம் ஏற்படவில்லை.  பெல்லன்வில் ரஜமகா விகாரையில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த விசேட பூஜை வழிபாடுகளுக்கு தேவையான சில உபகரணங்களை வைத்தியரின் தாயார் வீட்டிலிருந்து வைத்தியரின் சாரதி எடுத்துவந்த போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சந்தேக நபர்களை கைது செய்ய பிரதேசத்தில் உள்ள சி சி ரிவி கமராக்களில் பதிவான காட்சிகளையும் பொலிஸார் சோதனை செய்து வருகின்றனர்.

எலியந்தஜனாதிபதிதுப்பாக்கிவைத்தியர்
Comments (0)
Add Comment