ஜப்பானை தாக்கிய பனிப்புயலில் சிக்கி குறைந்தது 11பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் பனியை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது அகழியொன்றில் விழுந்து உயிரிழந்த 79 வயது நபரொருவரும் தீயணைப்பு படைவீரர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
அதிகளவு மரணங்கள் ஹொக்கெய்டோ தீவில் இடம்பெற்றுள்ளன.அங்கு வாகனத்தால் மோதுண்டு ஒரு பெண்ணும் பனியால் பண்டகசாலை இடிந்து விழுந்ததில் பிறிதொரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் ஹொன்ஷு தீவிலுள்ள நியிகதா எனும் இடத்திலுள்ள தனது வீட்டுக்கு வெளியில் 68 வயது நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர் தனது வீட்டு கார் தரிப்பிடத்தின் கூரையில் படிந்திருந்த பனியை அகற்ற முயற்சித்த போது வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மலைப் பிராந்திய பிரதேசங்களான ரிகதா மற்றும் நகனோவில் வீதியொன்று பனிப்பாறை சரிவால் மூடப்பட்டதால் 270 பேருக்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் புயலால் கடல் அலைகள் மேலெழக்கூடிய அபாயம் நிலவுகின்றதாக கரையோரப் பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த பனிப்புயலால் பிராந்தியத்திலான விமான போக்கு வரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.