அப்சல் குருவிற்கு ஆதரவாக கோஷமிட்டதால் தேசதுரோக வழக்கில் தேப்பட்டுவந்த ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் 10 நாட்களுக்கு பின் அப்பல்கலைகழகத்திற்கு திரும்பியுள்ளனர். அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட அப்சல்குருவின் நினைவாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவிற்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டதாக 6 பேர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் மாணவர் பேரவைத் தலைவர் கண்ணையா குமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த உமர் காலித் உள்ளிட்ட 5 மாணவர்கள் கடந்த 12ந்தேதி முதல் தலைமறைவாக இருந்தனர். அவர்கள் நேற்றிரவு திடீரென ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்திற்கு திரும்பினர்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சக மாணவர்களிடையே உரையாற்றிய அவர்கள் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாலேயே தலைமறைவாக இருந்ததாகக் கூறினர். தீவிரவாத இயக்கங்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவலை உமர் காலித் மறுத்தார். 5 பேரையும் டெல்லி போலீசார் எந்த நேரமும் கைது செய்யலாம் எனக் கூறப்படுகிறது