ஜெனீவா தீர்மானம் அரசாங்கத்திற்கு பாதகமாகவே அமையும் என்பதை முன்னரே உணர்ந்துவிட்டோம். இப்போது நவநீதம்பிள்ளையின் அறிக்கை எங்களுக்கு பெரிய விடயமல்ல என்று ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் தனது கருத்தினை தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். யார் எவ்வாறான தீர்மானங்களைக் கொண்டு வந்தாலும் இலங்கை விடயத்தில் சர்வதேச தலையீடுகளுக்கு இடமில்லை. சர்வதேச சக்திகள் இலங்கையை சீரழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் எனவும்அவர் மேலும் குறிப்பிட்டார்.
யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சனல் – 4 மற்றும் சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்த போதே இலங்கை தொடர்பில் எவரும் சுயாதீனமாக செயற்படமாட்டார்கள் என்பது வெளிப்பட்டுவிட்டது. அதேபோல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தபோதே அவர் இலங்கைக்கு எதிரான அறிக்கையினையே சமர்ப்பிப்பார் என்பது தெரிந்துவிட்டது.
இப்போது அவர் ஐ.நா.வில் சமர்ப்பித்துள்ள அறிக்கையினால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இலங்கையின் யுத்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்திருப்பின் இன்று பொதுமக்களே எமது ஆட்சியினை அமைத்து வேறு அரசாங்கத்தினை உருவாக்கியிருப்பார்கள். இன்று அரசாங்கத்தின் சக்தி அதிகரித்துக்கொண்டே போகின்றது.
ஏனைய எதிர்க்கட்சிகள் மிகவும் மோசமான முறையில் அழிந்து கொண்டிருக்கின்றது. ஆனால் எம்மீது இப்போதும் குற்றவாளிகள் என்ற பெயரை சுமத்தி அரசாங்கத்தினை தண்டிக்க முயற்சிக்கின்றனர். தமிழ் சிங்கள இனவாதமோ அல்லது மூவின மக்களிடையே கோபமோ கிடையாது. இன்று இலங்கையில் இருக்கும் முதல் பிரச்சினை விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் மற்றும் அரசாங்கத்தினை ஆதரிப்போர் என்பதுவே. அரசாங்கத்தினை பழிவாங்கும் நோக்கில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் இன்று சர்வதேசத்துடன் கைகோர்த்துள்ளனர்.
எம்மை ஆதரிக்கும் பல நாடுகள் இன்று எம் பின்னால் நிற்கின்றன. சீனா ரஷ்யா உட்பட பல முக்கிய நாடுகள் எம்மை கைவிடாது என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. ஆனால் அவர்களிடம் கெஞ்சி எமது நிலையினை விளங்கப்படுத்த நாம் ஒருபோதும் தயாராக இல்லை. யார் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களைக் கொண்டு வந்தாலும் இலங்கை விடயத்தில் சர்வதேச விசாரணைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. எமது தனித்துவத்தினையும்இ நாட்டின் ஒற்றுமை அபிவிருத்தியினை நாட செய்யும் வகையில் செயற்படுவோர் இலங்கையினை ஒன்றும் செய்ய முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் எவ்வாறான தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டாலும் அதற்கு முகம்கொடுக்க நாம் தயார் எனவும் அவர் தெரிவித்தார்.