தமிழகத்துக்கு தண்ணீர் கொடுத்ததை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்!

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதை கண்டித்து கர்நாடகத்தில் 15-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து கர்நாடகம் கடந்த 6-ந்தேதி இரவு முதல் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கண்டித்தும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக அரசை கண்டித்தும் கர்நாடகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக மண்டியா மாவட்டத்தில் பெரிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது. காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.

நேற்றும் தொடர்ந்து 6-வது நாளாக மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடகத்தில் மண்டியாவை தவிர மற்ற பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன. ஆனால் மண்டியாவில் தான் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் பேரணி சென்ற கன்னட அமைப்பினர், மாநில அரசு, தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இதனால் நேற்றும் மண்டியா மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை பெங்களூருவில் இருந்து மலவள்ளி வழியாக மைசூருவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் விவசாயிகள், கன்னட அமைப்பினர் பெங்களூரு-மைசூரு சாலையில் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெங்களூரு-மைசூரு சாலையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் சாலைகளில் அவர்கள் டயர் களை கொளுத்திப் போட்டு தடை ஏற்படுத்தினர்.

கே.ஆர்.எஸ். அணை அருகே நேற்று பந்தல் அமைத்து கன்னட அமைப்பினர், விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்டியா மாவட்டம் பாண்டவபுரா பகுதியிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் திடீரென்று ஒருவர் பின் ஒருவராக காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும், ரப்பர் படகு மூலம் சென்று காவிரியில் தத்தளித்துக் கொண்டிருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர், மண்டியா ரெயில் நிலையத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். ரெயில் நிலையம் முன்பு அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும், கன்னட அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இதையடுத்து போலீசார் வாட்டாள் நாகராஜ் உள்பட கன்னட அமைப்பினரை அங்கிருந்து குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று அப்புறப்படுத்தினார்கள்.

இதையடுத்து வாட்டாள் நாகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி பிரச்சினையில் நடந்த முழுஅடைப்பு போராட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இன்னும் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் சென்று கொண்டு தான் இருக்கிறது. அதனை நிறுத்த வேண்டும். காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும். கர்நாடகத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு தீர்வு காண வேண்டும்.

இதனால் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க வருகிற 15-ந்தேதி கர்நாடகத்தில் பெங்களூரு, மண்டியா, மைசூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன்னட அமைப்பினர் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல, மண்டியா மேற்கு போலீஸ் நிலையம் முன்பு பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், மண்டியா விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுப்பதாக ஏமாற்றி முதல்-மந்திரி சித்தராமையா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளார். மாநில விவசாயிகளுக்கு சித்தராமையா துரோகம் செய்து வருகிறார். இதனால் விவசாயிகளுக்கு மாநில அரசு தக்க நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.

பின்னர் முதல்-மந்திரி சித்தராமையா மீது பா.ஜனதாவினர் மண்டியா மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் புகாரை வாங்கவில்லை.

கர்நாடகாசித்தராமையாதண்ணீர்தமிழகம்போராட்டம்ரயில் மறியல்விவசாயம்
Comments (0)
Add Comment