பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் தலீபான் அமைப்பினர் இயங்கி வருகின்றனர். அவர்கள் அங்கு தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி அரசுக்கு பெருத்த சவாலாக திகழ்கின்றனர். கடந்த 2014–ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 16–ந்தேதி பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் அவர்கள் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள், ஆசிரியர்கள் என 148 பேர் கொன்று குவிக்கப்பட்டது உலகையே அதிர வைத்தது நினைவுகூரத்தக்கது.
அந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் தலீபான் அமைப்பினர் மீது பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு ஆப்கானிஸ்தான் எல்லையில் அப்பர் குர்ரம் ஏஜென்சி பகுதியில் பதுங்கி இருந்து, நாசவேலைகளில் ஈடுபட்டு வந்த தலீபான் அமைப்பின் தளபதிகள் 6 பேர் (மசூது அணியினர்), பாதுகாப்பு படையினர் முன் நேற்று முன்தினம் இரவு திடீரென சரண் அடைந்தனர்.
சரண் அடைந்தவர்களில் பாகிஸ்தான் தலீபான் அமைப்பின் முன்னாள் தலைவர் ஹக்கிமுல்லாவின் சகோதரர் இஜாஸ் மசூது, நெருங்கிய உறவினர் காயிர் முகமது ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். சரண் அடைந்த 6 பேரும் தேரா இஸ்மாயில் கான் கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் ராணுவம் உருவாக்கியுள்ள மறுவாழ்வு மையத்துக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.