தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ர மீது சர்ச்சைக்குரிய அரிசி மானியத் திட்டம் தொடர்பாக கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடும். அரசுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு அவர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டுமென அந்நாட்டின் ஊழல் தடுப்பு அமைப்பும் கூறியுள்ளது.
2014ஆம் ஆண்டு மே மாதம் யிங்லக், நீதிமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதற்கு பிறகு, அவரது அரசை ராணுவம் அகற்றியது.
அதற்குப் பிறகு, இந்த அரிசி மானியத் திட்டம் தொடர்பாக அவர் மீது நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அரசியலில் ஈடுபடவும் யிங்லக்கிற்கு ஐந்தாண்டுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது.
அப்போதிலிருந்து தாய்லாந்து ராணுவ ஆட்சியின் கீழ் இருந்துவருகிறது.
தாய்லாந்து மீண்டும் ஜனநாயகப் பாதைக்குத் திரும்போது, யிங்லக் திரும்ப வந்துவிடக்கூடாது என்பதற்காக அரசியல் ரீதியாக அவரை ஒழித்துக்கட்டும் முயற்சி இது என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
யிங்லக் தலைமையில் ஆட்சி நடந்தபோது விவசாயிகளிடமிருந்து சந்தை விலையைவிட கூடுதல் விலைக்கு அரசு அரிசியை வாங்கியது. இதனால், அரசுக்கு கோடிக் கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு பணத்தைத் திருப்பிவிட்டார் என விமர்சகர்கள் குற்றம்சாட்டினர். ஆனால், விவசாயிகளுக்கு லாபம் அளிக்கும் நோக்கிலேயேஇந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும் இந்தத் திட்டத்தின் தினசரி நடவடிக்கையில் தான் தலையிட்டதேயில்லை என்றும் யிங்லக் கூறினார்.
இந்த வழக்கை ஏற்று நடத்துவதா என்பதை மார்ச் 19ஆம் தேதி உச்ச நீதிமன்றம் முடிவுசெய்யும்.
இந்தத் திட்டத்தால் ஏற்பட்ட 11.9 பில்லியன் பவுண்ட் இழப்பை யிங்லக்கிடமிருந்து வசூலிக்க சிவில் வழக்கு ஒன்றைத் தொடர வேண்டுமென தேசிய ஊழல் கண்காணிப்பு அமைப்பு தனக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், வலியுறுத்தியிருப்பதாக நிதியமைச்சர் சொம்மை பஸ்ஸி புதன்கிழமையன்று தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு மே மாதம் ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. யிங்லக் அரசுக்கு எதிராக அவ்வப்போது நடந்துவந்த கலவரங்களை அடக்கி, நாட்டில் அமைதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக ராணுவம் தெரிவித்தது.
ஆனால், 2006ஆம் ஆண்டில், யிங்லக்கின் சகோதரர் தக்ஷின் ஷினவந்தரவை ஆட்சியிலிருந்து நீக்கியதிலிருந்தே தாய்லாந்தில் அரசியல் ஸ்திரமின்மை நீடித்துவருகிறது.
தாய்லாந்தின் கிராமப்புறங்களில் ஷினவத்ர குடும்பத்தினருக்கு செல்வாக்கு அதிகம். ஆனால், நகர்ப்புறத்தினரும் மத்திய தர வர்க்கத்தினரும் இவர்களை வெறுக்கின்றனர்.
2001ஆம் ஆண்டிலிருந்து வெவ்வேறு பெயர்களில் இருக்கும் கட்சிகளின் மூலம் தக்ஷின் குடும்பத்தினர் தொடர்புடைய கட்சிகளே தாய்லாந்தில் வெற்றிபெற்று வருகின்றன.