98 சதவீதமான வாக்கெடுப்புகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் குடியரசுக் கட்சியின் உட்கட்சி வாக்கெடுப்பில் டொனால்ட் டிரம்ப் 60 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார். அதேசமயம் ஹிலாரி கிளின்டன் 58 சதவீதத்துக்கு சிறிது குறைவான வாக்குகளைப் பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளார்.
இதன் பிரகாரம் அந்தப் பிராந்தியத்திலான குடியரசுக் கட்சியின் 95 பிரதிநிதிகளில் பெருமளவான பிரதிநிதிகளை டிரம்ப் பெற்றுள்ளார்.
வாக்கெடுப்புகளிலான வெற்றியையடுத்து மான்ஹெட்டனிலுள்ள டிரம்ப் கோபுரக் கட்டடத்தில் உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், இந்த வாக்கெடுப்பிலான வெற்றி நம்பமுடியாத ஒன்றாகவுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர்களில் மூன்றாம் இடத்திலுள்ள ஜோன் கஸிச் இந்த வாக்கெடுப்பில் 3 பிரதிநிதிகளைப் பெற்றுள்ளார்.
ஹிலாரி கிளின்டன் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில், நியூயோர்க் மக்கள் எப்போதும் தனக்கு ஆதரவளித்து வருவதாக குறிப்பிட்டு அவர்கள் தொடர்பில் தான் பெருமிதம் அடைவதாக தெரிவித்தார்.
நியூயோர்க் பிராந்தியத்தில் வாக்கெடுப்புகளுக்கு முன்னரான பிரசார நடவடிக்கைகளின் போது அந்தப் பிராந்தியத்துக்கான முன்னாள் செனட் சபை உறுப்பினரான ஹிலாரி கிளின்டனுக்கும் அவரது கட்சியைச் சேர்ந்த போட்டி வேட்பாளரும் அந்தப் பிராந்தியத்தில் பிறந்தவருமான பெர்னி சாண்டர்ஸுக்குமிடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் நியூயோர்க் பிராந்தியத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்புகளில் குழறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு வாக்காளர்கள் பட்டியல்களிலிருந்து 125,000 பேருக்கும் அதிகமானோரது பெயர்கள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தெரிவு செய்யப்படுவதற்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒருவர் 2,383 பிரதிநிதிகளை பெறுவது அவசியாகவுள்ள நிலையில் ஹிராரி கிளின்டன் இதுவரை 1,930 பிரதிநிதிகளைப் பெற்றுள்ளார். அதேசமயம் மேற்படி வேட்பாளர் தெரிவுக்கு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் 1,237 பிரதிநிதிகளைப் பெற வேண்டியது அவசியமாகவுள்ள நிலையில் டொனால்ட் டடிரம்ப் இதுவரை 845 பிரதிநிதிகளைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி உட்கட்சி வாக்கெடுப் புகள் நடைபெறவுள்ள பென்சில்வேனியா மாநிலம் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளையும் பொறுத்தவரை முக்கிய மாநிலமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.