நாடு முழுவதும் உள்ள 111 ஆறுகளில் நீர்வழிப்போக்குவரத்து ஏற்படுத்துவதற்கான தேசிய நீர்வழி மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
உள்நாட்டு நதிகளில் நீர் வழிப் போக்குவரத்தை அதிகரிக்கவும், பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்காக செலவிடும் தொகையை குறைக்கவும் தேசிய நீர்வழி மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறியது. இதன் மூலம் உள்நாட்டில் உள்ள நீர் வழித்தடங்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர்வழி மசோதாவானது, எந்த வகையிலும் மாநிலங்களின் உரிமையை கட்டுப்படுத்தாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும், நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தவும், செலவினங்களை குறைக்கவும் இந்த மசோதா வழிவகை செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். சீனாவில் 47 சதவிதமும், ஜப்பான் மற்றும் கொரியாவில் 44 சதவிகிதமும் நீர்வழிப்போக்குவரத்து பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் 3.5 சதவிகிதம் மட்டுமே நீர்வழிப்போக்குவரத்து உள்ளதாக நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.