புவியை வெப்பமாக்கும் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுபடுத்த நெதர்லாந்து அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறி காலநிலை மாற்றம் குறித்து கவலைகொள்ளும் செயற்பாட்டளர்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இது குறித்த தங்களது கவலைகளையும் அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அவ்வகையில் ஐரோப்பாவில் இப்படியான காரணம் ஒன்றுக்காக ஒரு அரசை நீதிமன்றத்துக்கு இழுத்திருப்பது இதுவே முதல் முறை.
புவியை வெப்பமாக்கும் வாயுக்களின் வெளியேற்றத்தை டச்சு அரசாங்கம் வேகமாகக் குறைக்க வேண்டும் என்று கோரி காலநிலை மாற்றம் குறித்த கவலை கொண்ட சுமார் 900 செயற்பாட்டாளர்கள், தி ஹேகிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
குடிமக்களை காலநிலை மாற்றங்களிலிருந்து காப்பாற்ற, உள்ளுர் சட்டங்களுடன் மனித உரிமைகளையும் இணைத்து உலகளவில் முன்னெடுக்கப்படும் முதலாவது வழக்கு இதுவாகத்தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது.