வெளிநாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கியவர்கள் பற்றிய பனாமா ரகசிய ஆவணப் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்ததைத் தொடர்ந்து ஐஸ்லாந்து பிரதமர் சிக்முன்டுர் டேவிட் குன்லாக்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியான அந்த பட்டியலில், ஐஸ்லாந்து நாட்டு பிரதமர் சிக்முண்டு டேவிட் குன்லாக்சன் பெயரும், அவருடைய மனைவியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
பிரிட்டிஷ் விர்ஜின் தீவில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதில் பல கோடி ரூபாய் பணத்தை இருவரும் முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஐஸ்லாந்தில் பிரதமருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து ஐஸ்லாந்து பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னணி : வெளிநாட்டு நிறுவனங்களுடன் ரகசியத் தொடர்பு வைத்துக் கொண்டு உள்நாட்டில் வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் குறித்து வெளியிடப்பட்ட பனாமா ரகசிய ஆவணங்களில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட 500 இந்தியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், உலக நாடுகளின் தலைவர்கள் பெயர்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.
பனாமா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சட்ட நிறுவனம் மொசாக் ஃபொன்சேகா. 1977-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், பெரு நிறுவன விவகாரங்களுக்கான ஆலோசனைகளை அளித்து வருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பணப் பரிவர்தனைகள், வெளிநாட்டு நிறுவனங்களுடனான தொடர்புகள், ரகசிய வங்கிக் கணக்குகள் ஆகியவை குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த அமைப்பால் திரட்டப்பட்டு வந்த கோடிக்கணக்கான ரகசிய ஆவணங்கள் ஜெர்மனி நாட்டில் உள்ள ஒரு தினசரி பத்திரிகைக்கு சிலரால் கடந்த 2015-ஆம் ஆண்டு கசியவிடப்பட்டன. இந்தத் தகவல்களை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தகவல்களை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு ஆய்வு செய்தது. இந்தக் கூட்டமைப்பில் 70 நாடுகளைச் சேர்ந்த 370 பத்திரிகையாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.