பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் – சம உரிமைகளுக்கான அமைப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென சம உரிமைகளுக்கான அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென அந்த அமைப்பு மேலும் கோரியுள்ளது.

ஏனெனில் அரசியல் கைதிகள் ஏற்கனவே தண்டனை அனுபவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்து, இராணுவத்தினரை முகாம்களுக்கு வரையறுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைப்பின் அழைப்பாளர் ரவீந்திர முதலிகே கோரிக்கை விடுத்துள்ளார்.

இடம்பெயர் மக்கள் அனைவரையும் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். மேலதிகமாக படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு தொழில் பயிற்சிகளை வழங்கி வேறும் துறைகளில் ஊழிய வளமாக அவர்களை ஈடுபடுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையுமே தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றில் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்றெல்லாம் குறிப்பிடாது இலங்கையர் என்று குறிப்பிடப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல்வாதிகள் முக்கிய பிரமுகர்களின் கொலைகளைப் போன்றே ரத்துபஸ்வல போன்ற இடங்களில் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசங்கத்தை பாதுகாக்கும் ஓர் கவசமாக தேசியப் பாதுகாப்பு பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரச நிறுவனங்களிலும் மொழி கரும பீடங்கள் அமைக்கப்பட வேண்டுமெனவும், தமிழ் மக்கள் தங்களது மொழியிலேயே சேவைகளை பெற்றுக்கொள்ள வழியமைக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு நட்ட ஈடு வழங்க நடவடிக்கi எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய இலங்கை மீனவர் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமைப்புஅரசியல்உரிமைகைதிகள்கோரிக்கைசமதடைச்சட்டம்நீக்கம்பயங்கரவாதம்மீள்குடியேற்றம்ரத்துரவீந்திரமுதலிகேவிடுதலை
Comments (0)
Add Comment