பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி மும்பையில் புகுந்து கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றினர்.
பிரபல தாஜ் ஓட்டல், ரெயில் நிலையம் என பல்வேறு பகுதிகளில் நுழைந்த அவர்கள், கண்ணில் பட்டவர்களையெல்லாம் கொத்து கொத்தாக கொன்று குவித்தனர். தீவிரவாதிகளின் இந்த வெறியாட்டத்தில், வெளிநாட்டினர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையே உலுக்கிய இந்த தாக்குதலை, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர், பாகிஸ்தான் உளவுத்துறையின் ஆதரவுடன் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவரான டேவிட் ஹெட்லி என்ற லஷ்கர் தீவிரவாதியும் மும்பை தாக்குதலுக்கு திட்டம் வகுத்தவர்களில் ஒருவர் என கண்டுபிடிக்கப்பட்டது. அவர் 2009-ம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இந்தியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் மும்பை தாக்குதலில் அவருடைய தொடர்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஹெட்லி, மும்பை தாக்குதல் வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்ததுடன், இந்த வழக்கில் சாட்சியம் அளிக்கவும் முன்வந்தார். இதற்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி அளித்த மும்பை சிறப்பு கோர்ட்டு, பிப்ரவரி 8-ந்தேதி (இன்று) வாக்குமூலம் பெற முடிவு செய்தது.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) வீடியோ கான்பரன்சிங் மூலம் ஹெட்லியிடம் மும்பை சிறப்பு கோர்ட்டு விசாரணை நடத்தியது. அமெரிக்க சிறையில் இருந்தவாறு இன்று காலை ஏழு மணியளவில் டேவிட் ஹெட்லி வீடியோ கான்பிரன்சிங் முறையில் மும்பை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தான்.
நீதிபதியின் முன்னிலையில் டேவிட் ஹெட்லி இன்று அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான நான் மும்பை தாக்குதலுக்கு முன்னர் ஏழுமுறையும் தாக்குதலுக்கு பின்னர் ஒருமுறையும் இந்தியாவுக்கு சென்றுள்ளேன். கடந்த 2006-ம் ஆண்டு தாவூத் கிலானி என்ற எனது பெயரை டேவிட் ஹெட்லி என்று மாற்றிக் கொண்டேன். அதே பெயரில் அமெரிக்காவில் புதிய பாஸ்போர்ட்டும் எடுத்தேன்.
இந்த தகவலை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தில் உள்ள எனது கூட்டாளிகளுக்கு தெரிவித்தேன். அந்த இயக்கத்தை சேர்ந்தவர் என்ற முறையில் என்னுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த சாஜித் மிர் என்பவருக்கும் இந்த தகவலை கூறினேன்.
அமெரிக்காவை சேர்ந்தவன் என்ற புதிய அடையாளத்துடன் இந்தியாவுக்குள் நுழைந்து அங்கு ஒரு அலுவலகம் அமைத்து, தொழில் செய்து இந்தியாவிலேயே வாழ விரும்பினேன். அதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த நான் என்னைப்பற்றிய உண்மையான தகவல்களை மறைத்து, பொய்யான தகவல்களையே அளித்திருந்தேன்.
முதல்முறையாக நான் இந்தியாவுக்கு போவதற்கு முன்னால் மும்பை நகரை வீடியோவாக படம்பிடித்து தரும்படி சாஜித் மிர் என்னை கேட்டுக் கொண்டார். 2006 முதல் 2008 வரை இந்தியாவுக்கு வந்த நான் மும்பையில் பல இடங்களை வீடியோவாக பதிவு செய்தேன்.
அங்குள்ள பிரபல தாஜ் ஹோட்டல், ஓபெராய் ஹோட்டல், நரிமன் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களை தாக்குதல் நடத்த தகுந்த இடமாக வரைபடம் அமைத்து தந்தேன்.
இவ்வாறு அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.