பிரசல்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் பெல்ஜியம் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக அவர் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்சுக்கு நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார் நேற்று அவர் பிரசல்ஸ் நகருக்கு போய் சேர்ந்தார்.
அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு நடத்திய மேல்பீக் சுரங்க ரெயில் நிலையத்துக்கு சென்றார். அங்கு தீவிரவாத தாக்குதல்களில் பலியான தமிழர் ராகவேந்திரன் கணேசன் உள்ளிட்டவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரூப் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள செய்தியில், “வேதனையான தருணத்தில் இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது. அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளுக்கு முன்பாக மேல்பீக் சுரங்க ரெயில் நிலையத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்தார்.
அங்கு அவர் ராகவேந்திரன் கணேசனையும், மற்றவர்களையும் நினைவுகூர்ந்தார்” என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மிச்சேலை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவருக்கு பெல்ஜியம் பிரதமர் மதிய விருந்து அளித்து கவுரவித்தார். அப்போது பிரதமர் மோடி பேசியபோது கூறியதாவது:- தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு நின்று போரிட வேண்டும். இதில் இந்தியா 40 ஆண்டுகளாக போராடி வருகிறது. தீவிரவாதத்தை எதிர்த்து எல்லா நாடுகளும் போரிட வேண்டும்.
பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை பெல்ஜியம் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியா துறைமுக துறையை பெரிய அளவில் மேம்படுத்தி வருகிறது. உள்நாட்டு நீர் போக்குவரத்து வழிகள், பெல்ஜியம் தொழில் அதிபர்களுக்கு வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளது. பிரதமர் மிச்சேலுடனான பேச்சுவார்த்தை பயனுள்ள விதத்தில் அமைந்தது.
அறிவியல், தொழில்நுட்பம் தொடங்கி வர்த்தகம் வரை இரு நாடுகளும் இணைந்து நிறைய செய்ய முடியும். நாம் இன்றைக்கு ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்கிற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தியா மிகப்பெரிய வாய்ப்புகளை அளிக்கிறது. சந்தையாக மட்டுமல்ல. மிகப்பெரிய திறன் மையமாகவும்தான். இந்தியாவும், பெல்ஜியமும் ரத்த உறவினை கொண்டுள்ளன. 100 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் வீரர்கள் இங்கு வந்து போரிட்டனர். அவர்களில் 9 ஆயிரம் பேர் வீர மரணம் அடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார். பெல்ஜியம் உதவியுடன் இந்தியாவின் ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கி உத்தரகாண்ட் மாநிலம், நைனிடால் அருகே நிறுவப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை பிரதமர் மோடியும், பெல்ஜியம் பிரதமர் மிச்சேலும் இணைந்து ‘ரிமோட்’ மூலம் இயக்கி தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து நடந்த இந்திய-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற உறுப்பினர்கள், பெல்ஜியம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசினார். பெல்ஜியம் வாழ் இந்தியர்கள் அளித்த வரவேற்பை ஏற்றும் பிரதமர் மோடி பேசினார். இன்று அமெரிக்கா பயணம் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அமெரிக்க சுற்றுப்பயணத்துக்காக இன்று (வியாழக்கிழமை) வாஷிங்டன் செல்கிறார். அங்கு அவர் இன்றும், நாளையும் அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார். அத்துடன் 2 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக சவுதி அரேபியா செல்கிறார்.