கடந்த வெள்ளிக்கிழமை பிரசல்ஸ் நகரில் ஜிகாதி தீவிரவாதி எனும் சந்தேகத்தின் பேரில் சாலாஹ் அப்தஸ்லாம் கைது செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டுடனான எல்லைப் பகுதிக்கு பிரான்ஸ் கூடுதல் துருப்புக்களை அனுப்புகிறது.
கடந்த நவம்பர் மாதம் பாரிஸில் 130 பேர் உயிரிழக்க காரணமானத் தீவிரவாதத் தாக்குதலில் அப்தஸ்லாம் தொடர்புபட்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுகிறது. பிரான்ஸில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெறும் எனும் அச்சுறுத்தல் மிகப் பெரிய அளவில் உள்ளது என உள்துறை அமைச்சர் பெர்ணாட் காசந்யூவே தெரிவித்துள்ளார். இதனிடையே அப்தஸ்லாமின் கூட்டாளிகள் ஐரோப்பாவிலிருந்து தப்பியோட முயற்சிக்கலாம் என சர்வதேசக் காவல்துறை அமைப்பான இண்டர்போல் எச்சரித்துள்ளது.
பிரான்ஸின் தேசிய விளையாட்டு அரங்கில் தற்கொலைத் தாக்குதலை நடத்தத் தான் திட்டமிட்டிருந்ததாகவும், எனினும் பின்னர் தனது மனதை மாற்றிக் கொண்டதாக அப்தஸ்லம் விசாரணையின்போது தெரிவித்தார் என பிரெஞ்ச் அரச வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். பெல்ஜியத்திலிருந்து தன்னை நாடுகடத்தும் முயற்சியை எதிர்த்து போராடவும் அவர் முயற்சித்து வருகிறார்.