பிரித்தானியா மற்றும் வேல்ஸில் 28,850க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் உள்ளன.
பள்ளி மாணவர்களிடம் ஆயுதம் ஏந்தும் கலாச்சாரம் சில வருடங்களாகவே அதிகரித்து வருகிறது.
கத்தி, துப்பாக்கி, கோடாரி போன்ற பயங்கர ஆயுதங்களை மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு எடுத்து வருவது தொடர் கதையாகி வருகிறது.
இது குறித்து கூறிய பொலிசார், கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் மாணவர்களிடம் பல்வேறு வகையான ஆயுதங்கள் 2579-ஐ கைப்பற்றினோம்.
கடந்த 2016 மற்றும் இந்த வருடத்தின் மூன்று மாதங்களில் மட்டும் 1369 ஆயுதங்களை கைப்பற்றியுள்ளோம்.
இதில் அதிகமாக கத்தி மற்றும் வாள் ஆயுதங்கள் அடங்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், 26 துப்பாக்கிகள், இரும்பு கம்பிகள் போன்றவைகளும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகத்துடன் பொலிசாரும் இணைந்து, மாணவர்கள் ஆயுதங்களை எடுத்து வருவதை தடுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இது குறித்து பள்ளி மற்றும் கல்லூரி சங்கங்களின் தலைவர் Geoff Barton கூறுகையில், பள்ளி மாணவர்களை பாதுகாக்க பொலிசாருடன் சேர்ந்து பள்ளி நிர்வாகம் பணியாற்றி வருகின்றன.
பல பள்ளிக்கூடங்களில் பொலிசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
ஆயுதங்களை வைத்திருக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்கள் மீது ஒழுங்கு முறை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த 2014ல் பள்ளி மாணவர் ஒருவர் பள்ளிக்கூட வாசலில் மற்றொரு மாணவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பானது.
அதே போல இன்னொரு பள்ளிக்கூட மாணவர் பள்ளி வளாகத்தில் கத்தியை காட்டி எல்லோரையும் மிரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியடைய வைத்தது குறிப்பிடத்தக்கது.