புதன்கிழமை நடைபெற்ற பெங்களூரு மேயர், துணை மேயருக்கான தேர்தலில் காங்கிரஸ், மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் பிரகாஷ் நகர் வார்டு உறுப்பினர் ஜி.பத்மாவதியும், துணை மேயர் பதவிக்கு மஜதவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணா கோயில் வார்டு உறுப்பினர் எம்.ஆனந்தும் போட்டியிட்டனர்.
இதேபோல, பாஜக சார்பில் மேயர் பதவிக்கு கணேஷ்மந்திர் வார்டு உறுப்பினர் டி.எச்.லட்சுமியும், துணை மேயர் பதவிக்கு எச்.எஸ்.ஆர் லேஅவுட்டைச் சேர்ந்த குருமூர்த்தி ரெட்டியும் போட்டியிட்டனர்.
மண்டல ஆணையர் எம்.வி.ஜெயந்தி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். புதன்கிழமை காலை 11.30 மணியளவில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஜெயராம் ரமேஷ், அமைச்சர்கள் ஜி.பரமேஸ்வர், ராமலிங்க ரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், கிருஷ்ண பைரே கெüடா, எம்.கிருஷ்ணப்பா, எம்.எல்.ஏ.க்கள் தினேஷ் குண்டுராவ், என்.ஏ. ஹாரீஸ், பைரதி பசவராஜ், சோமசேகர், முனிரத்னா, ஆர். அசோக், ரகு, விஸ்வநாத் உள்பட பலர் ஆர்வமாக வாக்களித்தனர்.
மொத்தமுள்ள 269 வாக்குகளில் மேயர் பதவிக்குப் போட்டியிட்ட காங்கிரஸ் உறுப்பினர் பத்மாவதிக்கு 142 வாக்குகளும், பாஜக சார்பில் போட்டியிட்ட லட்சுமிக்கு 120 வாக்குகளும் கிடைத்தன.
இதைத் தொடர்ந்து பத்மாவதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
துணை மேயர் தேர்தலில் மஜதவைச் சேர்ந்த ஆனந்த் 142 வாக்குகள் பெற்றார். இதையடுத்து, அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் பெங்களூரு மாநகராட்சியின் 50-ஆவது மேயராக ஜி.பத்மாவதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேயராக வெற்றிபெற்ற பத்மாவதிக்கும், துணை மேயராக வெற்றிபெற்ற ஆனந்துக்கும் முன்னாள் மேயர் மஞ்சுநாத் ரெட்டி மற்றும் அமைச்சர்கள், மாமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
மேயராக வெற்றிபெற்ற பத்மாவதி, முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்து ஆசி பெற்றார்.
தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவரான பத்மாவதி வெற்றிபெற்றுள்ளது பெங்களூரு தமிழர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.