சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கிறித்துவ பெண் மதபோதகரை மாலி நாட்டில் இரண்டாவது முறையாக ஜிகாதிகள் கடத்திச் சென்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸ் நாட்டை சேர்ந்த Beatrice Stockly(40) என்ற கிறித்துவ பெண் மதபோதகர் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டிற்கு கடந்த 2012ம் வருடம் பயணமாகியுள்ளார். மாலியில் உள்ள Timbuktu என்ற நகரில் அவர் தங்கியிருந்தபோது அதே ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிகாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். ஆனால், மாலி அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்ற ஜிகாதிகள் 2 வாரங்களுக்கு பின்னர் மதபோதகரை விடுதலை செய்தனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் மதபோதகர் தங்கியிருந்த அதே வீட்டில் இருந்து அவரை சில ஜிகாதிகள் இரண்டாவது முறையாக கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த கடத்தளுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், அப்பகுதியில் தீவிரமாக செயல்படும் அல்-கொய்தா அமைப்பை சேர்ந்த ஜிகாதிகள் கடத்தி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாலி நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளரான Souleymane Maiga கூறுகையில், ‘வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் மதபோதகரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், கடத்தல்காரர்கள் யார்? அவர்களது கோரிக்கை என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக’ தெரிவித்துள்ளார். இந்த கடத்தல் குறித்து சுவிஸ் வெளியுறவு துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு மதபோதகரை ஜிகாதிகல் கடத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மாலி நாட்டில் வெளிநாட்டினர்களை கடத்தும் சம்பவங்கள் அதிகம் நிகழ்வதால், அந்நாட்டிற்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் என கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தோம். ஆனாலும், தற்போது இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போது மாலி நாட்டு அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், பெண் மதபோதகரை மீட்க எல்லாவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.