சீனாவின் தலைநகர் பெய்ஜிங் அருகே பெய்டேகே என்ற கடற்கரையோர நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நேற்று ஒரு வாலிபர் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினார்.
அங்கு பணிபுரிந்த நர்சுகள் மற்றும் பணியாளர்களை அவர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்களும், நோயாளிகளும் பயந்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த தாக்குதலில் 6 நர்சுகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு நர்சு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடனே அங்கிருந்தவர்கள் தாக்குதல் நடத்திய வாலிபரை பிடித்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் லி ஸியோலாங் (வயது 27) என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் அதே ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. நர்சுகளை கொலை செய்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சீனாவில் கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்பத்திரி மற்றும் டாக்டர்கள் மீதான தாக்குதல்கள் நீடித்து வருகிறது. நோயாளிகளிடம் அதிக பணம் வசூலித்தல், மருத்துவ சிகிச்சை குறைபாடு போன்ற காரணங்களால் இதுபோன்ற தாக்குதல்கள் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.