மட்டக்களப்பு மாவட்டத்தின் அம்பிளாந்துறை ஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயங்களில் பதுளை கொஸ்லாந்த பகுதிகளில் மண்சரிவினால் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் முகமாக அஞ்சலியுடனான பூசை வழிபாடு இடம்பெற்றது.
நேற்று முன்தினம் மட்டக்களப்பு அம்பிளாந்துறை ஆலயத்தின் தலைவர் சி.தவராசா தலைமையில் இவ்வஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,
மண்சரிவு நடைபெற்று ஒரு மாதம் முடிந்தும் இது நாள்வரைக்கும் இன்னும் அங்கு தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கான நிரந்தர வீடு அமைத்துக் கொடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் வேதனைதரும் விடயமாகும்.
இந்த நாட்டிலே ஜனாதிபதி தேர்தலொன்று அறிவிக்கப்பட்ட பின்னரும் அங்கு வாழும் (மலையக) மக்களுக்கான நிரந்தர தனியான வீட்டுத்திட்டத்தினை செய்ய முடியாமல் இருப்பது மிகவும் மோசமான செயற்பாடாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது.
வடக்குக் கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வில் புறக்கணிப்பு காட்டப்படுவதனைப்போன்று மலைய மக்களுக்கும் நிரந்தர வீட்டுத்திட்டம் புறக்கணிப்பு காட்டப்படுகின்றது.
இச்செயற்பாடானது ஒட்டுமொத்த இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக இனவாத அரசுகளால் இடம்பெறும் ஒரு திட்டமிட்ட செயற்பாடாகும்.
அந்த மக்களை உரிய இடங்களில் உரிய நேரத்தில் சகல வசதிகளுடனும் கூடிய வீடுகளை அமைத்துக் கொடுத்து வாழவைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் கூறினார்.