மியான்மரில் ராணுவத்திற்கும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த கலகக் குழுவிற்கும் இடையில் கடும் சண்டை ஏற்பட்டிருப்பதால், அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கோகங் பிராந்தியத்தைவிட்டு ஆயிரக்கணக்கான சிவிலியன்கள் வெளியேறிவருகின்றனர்.
கடந்த சில நாட்களாக நடந்துவரும் சண்டையில் கலகக்காரர்கள், படையினர் என 80 பேருக்கும் மேல் உயிரிழந்ததையடுத்து, செவ்வாய்க்கிழமையன்று நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
2009ஆம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறிய கோகங் இனக்குழு தலைவர் மீண்டும் திரும்பியதையடுத்து, வன்முறைச் சம்பவங்கள் துவங்கியதாக அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சண்டை நடைபெறும் லவுக்கை நகரில் உதவிப் பணிகளில் ஈடுபட்டுவரும் தன்னார்வ நிறுவனங்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டுள்ளன.
செவ்வாய்க் கிழமையன்று மியான்மர் நாட்டு செஞ்சிலுவைச் சங்கத்து வாகனங்கள் மீது ஆயுத தாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு பணியாளர்கள் காயமடைந்தனர். இதையடுத்து இந்த முடிவை உதவி நிறுவனங்கள் எடுத்துள்ளன.
“லவுக்கை பிராந்தியத்தில் எவ்வளவு பேர் சிக்கியிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. புதன் கிழமையிலிருந்து 30 பேரை வெளியேற்றியிருக்கிறோம்” என செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
“இரு தரப்புமே சில நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுவருகிறோம். அப்படிச் செய்தால் அங்கிருக்கும் மக்களை வெளியேற்ற உதவ முடியும். இப்போது எங்களுடைய செஞ்சிலுவைச் சங்க சின்னம் மக்களைக் காப்பாற்ற உதவவில்லை” என்றும் அவர் கூறினார்.
ஷான் மாகாணத்திலிருந்து சுமார் 30,000 கோகங் இனத்தினர் எல்லையைக் கடந்து சீனாவிற்குள் வந்திருப்பதாக சீனவின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எல்லையில் கட்டுப்பாட்டை அதிகரித்திருப்பதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளன. இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மேலும் பலர் லவுக்கை நகருக்கு தெற்கில் 140 கி.மீ. தூரத்தில் உள்ள லாஷியோ நகருக்குச் சென்றுள்ளனர்.
கோகங் சிறப்புப் பிராந்தியத்தில் உள்ள சின் ஸ்வே ஹா பகுதிக்குச் சென்ற பிபிசி செய்தியாளர், அந்த நகரமே ஆளில்லாமல் வெறிச்சோடிப் போய், காணப்படுகிறது என்றும் தெருக்களில் ராணுவ வீரர்கள் மட்டுமே நடமாடுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
மியான்மரில் இருக்கும் இனச் சிறுபான்மையினர் தங்கள் பகுதிக்கு கூடுதல் அதிகாரம் கேட்டு பல ஆண்டுகளாகப் போராடிவருகின்றனர். அடுத்த மாதம் இந்த இனக் குழுக்களுடன் அமைதி ஒப்பந்தத்தைச் செய்யவிருக்கிறது.
தற்போது நடந்துவரும் சண்டை, கடந்த வாரம் கொகாங் நகரின் தலைநகரான லவுக்கையில் துவங்கியது. இதில் ஐம்பது ராணுவ வீரர்களும் 26 கலகக்காரர்களும் கொல்லப்பட்டனர்.
இந்த மோதலில், மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணி ராணுவம் உள்ளிட்ட நான்கு வெவ்வேறு கலகக் குழுக்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் போதைப் பொருள் கடத்தல் மன்னனும் தற்போது ஒரு கலகக் குழுவின் தலைவனுமாக இருக்கும் ஃபோன் கியா ஷின் என்பவர்தான் தற்போதைய மோதலின் மையமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
2009ஆம் ஆண்டில் பர்மியத் துருப்புகள் நெருக்கியதையடுத்து, நாட்டைவிட்டு ஃபோன் கியா ஷின் வெளியேறினார். கோகங் மக்களின் உரிமைகளை மேம்படுத்துவதாக வாக்குறுதியளித்து தற்போது மீண்டும் அவர் நாடு திரும்பியுள்ளார்.