அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் தகவல்துறையில் இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோயோஜித் பால். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் பிரதமர் மோடி சர்வதேச அளவில் பிரபலமான தலைவராக மாறியது எப்படி? என ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டுவிட்டுகளை ஆராய்ந்து இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதுகுறித்து பேராசிரியர் ஜோயோஜித் பால் தெரிவித்தவை பின்வருமாறு:- டுவிட்டரில் பிரதமர் மோடி தொடர்ந்து தனது எண்ணங்களை பகிர்ந்து வந்ததே அவரை சர்வதேச அளவில் பிரபலமாக உயர்த்த உதவியாக இருந்தது. நாட்டு மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள அவர் டுவிட்டரை ஒரு சரியான கருவியாக பயன்படுத்தினார். இதுவரை இருந்த இந்திய பிரதமர்களிலேயே மக்களுடன் அதிகம் தொடர்பிலிருக்கும் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார்.
ஒரு குடிமகனாக இருக்கலாம். ஒரு பத்திரிகை செய்தியாளராக இருக்கலாம். அல்லது ஒரு தொலைக்காட்சி சேனலில் பணியாற்றுபவராக இருக்கலாம். பிரதமரின் பேச்சை கேட்க வேண்டும் என்றால் அவரது சமூக வலைத்தளங்களுக்குள் சென்றால் போதும். பிரதமரின் கருத்துக்களை பதிவு செய்ய ஒரு முக்கிய இடமாக சமூக வலைத்தளம் உள்ளது. பிரதமர் மோடி டுவிட்டரில் செய்யும் பதிவுகள் அனைத்தும் குறைந்தது 1000 முறையாவது ரீடுவிட் செய்யப்படுகின்றன. அமெரிக்காவில் அரசின் தலைமை அவ்வப்போது செய்தியாளர் சந்திப்புகளில் தோன்றுவது வழக்கம். ஆனால், இந்தியாவில் அப்படி அல்ல. எனினும், பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களையே தனது செய்திகளை வெளியிட கருவியாக பயன்படுத்தினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.