சிரியாவில் இருந்து தப்ப முயன்ற 100 வெளிநாட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் அல்கொய்தா தீவிரவாதிகளை விட கொடிய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ஈராக்கில் அவர்கள் மொசூல் மற்றும் அந்த நாட்டின் வடக்கு, மேற்கு பகுதி நகரங்களையும் கைப்பற்றினர். அவர்கள் தலைநகர் பாக்தாத்தை நெருங்கிய வேளையில், ஈராக் மற்றும் குர்தீஷ் அரசுகளின் வேண்டுகோளை ஏற்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவத்துக்கு ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அங்கு அமெரிக்காவின் தாக்குதல் தொடங்கியது.
தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தொடர்ந்து நடத்திய வான்தாக்குதல்கள், அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தின. இதன் காரணமாக மேற்கொண்டு முன்னேற முடியாமல் அந்த இயக்கத்தினர் தத்தளித்து வருகின்றனர். இது அந்த இயக்கத்தில் உள்ள தீவிரவாதிகளுக்கு மனத்தளர்வையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த ரக்கா நகரில் உள்ள தளத்தில் இருந்து தப்பி, தங்கள் நாடுகளுக்கு ஓட தயாரான 100 வெளிநாட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், அதிபர் பஷார் அல் ஆசாத்தின் நிர்வாகத்துக்கும் எதிரான ஒருவர் உறுதி செய்தார். கைதும் செய்யப்படுகின்றனர்.
அவர் இங்கிலாந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் மன உறுதி குறைந்து விட்டது என்று கூற முடியாது. அவர்களின் மன உறுதி, மண்ணோடு மண்ணாக விழுந்து விட்டது என்றுதான் கூற வேண்டும். உள்ளூர் போராளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் கடுமையாக உழைத்தும், உயிரிழந்து வருவதாக கருதுகின்றனர். வெளிநாட்டு போராளிகளைப் பொறுத்தமட்டில், சாகச செயல்களில் ஈடுபடுவதாக நினைத்தவர்களிடம், இப்போது அந்த உணர்வு வற்றிப்போய் விட்டது என கூறி உள்ளார்.
ரக்காவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்த பத்திரிகை நிறுவனத்திடம் கூறும்போது, ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களுக்கு என்று போலீஸ் படையை உருவாக்கி உள்ளனர். களத்துக்கு வராத ஐ.எஸ். தீவிரவாதிகளை அந்தப் போலீஸ் படையினர் கண்டறிந்து பிடித்து வருகின்றனர். ஐ.எஸ். போராளிகளின் வீடுகளுக்கு சென்று, அவர்கள் சோதனை போட்டுள்ளனர். ஏராளமானவர்களை கைது செய்துள்ளனர், என்றனர். இதுவரை 400 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ரக்காவில் 100 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தியை நியூஸ் 24செய்தி சேனலும் வெளியிட்டுள்ளது.