ராஜஸ்தானில் 19 மாவட்டங்களில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம்

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 33 மாவட்டங்களுள், 19 மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

அஜ்மீர், பன்ஸ்வாரா, பாரன், பார்மெர், பில்வாரா, சித்தூர்கர், சுரூ, துங்கார்பூர், ஹனுமன்கார், ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், ஜோத்பூர், உதய்ப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டு கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வருகின்றன.

வறண்டுக் கிடக்கும் பில்வாரா மாவட்டத்துக்கு நசீராபாத்திலிருந்து ரயில்கள் மூலமும், மற்ற பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலமும் குடிநீர் விநியோகிக்கும் பணியை மாநில பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறை ஏற்கெனவே தொடங்கியுள்ளது.

குடிநீர் விநியோகத்தை அதிகரிப்பதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு  மாவட்டத்துக்கும் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 90 சதவீத தண்ணீர் தொடர்பான திட்டங்கள் நிலத்தடி நீரையே சார்ந்துள்ளன. ஆனால் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே செல்வதால் ஆறு, குளம், கடல் ஆகியவற்றில் உள்ள நீரை பயன்படுத்தி வருகிறோம்.

பழுதடைந்த கைப்பம்புகளை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

சுமார் 7 லட்சம் கைப்பம்புகளை 421 குழுவினர் பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பில்வாராவுக்கு ரயில்கள் மூலம் தண்ணீர் அனுப்புவதற்கு ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் நிதி செலவிடப்படுகிறது.

தண்ணீர்ப் பஞ்சத்தால் 7,364 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர் தட்டுப்பாட்டை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கிரண் மகேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறினார்.

குடிநீர் விநியோகம்தண்ணீர் பஞ்சம்நிலத்தடி நீர்ராஜஸ்தான்
Comments (0)
Add Comment